July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை -தென்ஆபிரிக்க டெஸ்ட்; வேகத்துக்கும் சுழலுக்கும் இடையிலான சவால்

தென் ஆபிரிக்காவுக்கு விஜயம் செய்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி முதல் டெஸ்ட் போட்டியை பொக்ஸிங் டே என வர்ணிக்கப்படும் நத்தார் பண்டிகையின் மறுநாள் எதிர்கொள்கின்றது. நடைபெறும் இந்தப் போட்டி இலங்கையின் சுழல்பந்து வீச்சுக்கும், தென் ஆபிரிக்காவின் வேகப்பந்து வீச்சுக்கும் இடையிலான சவாலாக கருதப்படுகின்றது.

இலங்கை அணி சுமார் 10 மாதங்களின் பின்னர் விளையாடும் முதல் சர்வதேச கிரிக்கெட் தொடர் இதுவாகும். கொரோனா அச்சுறுத்தல், முடக்கம் ஆகியவற்றால் கடந்த மார்ச் மாதத்திலிருந்து இலங்கை வீரர்கள் ஓய்விலேயே இருக்கிறார்கள்.

இந்த நிலையில் அண்மையில் நடந்து முடிந்த எல்.பி.எல் இருபது20 தொடரே இலங்கை அணி வீரர்களுக்கு கிடைத்த ஒரே பயிற்சி அனுபவமாகும். ஆனாலும் அது வெறும் 20 ஓவர்கள் போட்டி என்பதால் அணி வீரர்களின் திறமையை உறுதியாக கணிப்பிட முடியாது.

எவ்வாறாக இருந்தாலும் சிறப்பாக பந்துவீசியதன் மூலமே சுழல்பந்து வீச்சாளரான வனிந்து ஹசரங்கவுக்கு இந்த விஜயத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதுவரை டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றிராத அவருக்கு இந்த முறை டெஸ்ட் அறிமுகம் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.

அவ்வாறு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் தென் ஆபிரிக்க துடுப்பாட்ட வீரர்கள் நிச்சயமாக வனிந்து ஹசரங்கவின் பந்துவீச்சில் திக்குமுக்காடுவார்கள். ஏனெனில், தென் ஆபிரிக்கா தொன்றுதொட்டு சுழல்பந்து வீச்சுக்கு தடுமாறியே வருகின்றது.

போதாக்குறைக்கு தனஞ்சய டி சில்வாவும் பந்துவீச்சில் பிரகாசிப்பார் என்பதால் தென்ஆபிரிக்க அணியின் நிலைமை திண்டாட்டமாகவே இருக்கும்.

ஆனால், இலங்கை அணியின் துடுப்பாட்டம் நம்பிக்கையற்ற விதத்திலேயே உள்ளது. வேகப்பந்துகள் எகிறிப் பாயும் தென்ஆபிரிக்க ஆடுகளங்களில் இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் தாக்குபிடிப்பார்களா என்பது சந்தேகமே. அந்த சந்தேகத்துக்கு முற்றுப்புள்ளிவைத்து துடுப்பாட்டத்தில் பிரகாசித்தால் மாத்திரமே இலங்கை அணியால் சாதிக்க முடியும்.

ஏழு புதுமுக வீரர்களுடன் தென்ஆபிரிக்கா களமிறங்க தயாராகியுள்ளதுடன், அவர்களின் இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் பலர் இடம்பெறுகின்றனர். எனவேதான் இந்தத் தொடர் பந்துவீச்சாளர்களின் போட்டியாக பார்க்கப்படுகிறது. யார் யார் பிரகாசிக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.