April 30, 2025 6:45:56

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மாற்றத்தை ஏற்படுத்துமா இந்தியா?

அவுஸ்திரேலிய மண்ணில் கடந்த வாரம் அடைந்த படுதோல்வியினால் விடுக்கப்பட்ட விமர்சனங்கள் மற்றும் அழுத்தங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் எதிர்பார்ப்புடன் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பல மாற்றங்களுடன் எதிர்கொள்ள இந்தியா தயாராகியுள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்துள்ள இந்திய அணி ஏற்கனவே சர்வதேச ஒருநாள் தொடரை 2-1 என இழந்த போதிலும் சர்வதேச இருபது20 தொடரை 2-1 என கைப்பற்றி சவால் விடுத்தது.

ஆனாலும், அடிலெய்டில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் இன்னிங்ஸில் 36 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்ததுடன் படுதோல்வியடைந்தது.

இந்த நிலையில் அணித்தலைவர் விராத் கோஹ்லி மனைவிக்கு தலைப்பிரசவம் என்பதால் நாடு திரும்பிவிட்டார். இதனால் அஸின்கெயா ரஹானேவின் தலைமையில் எஞ்சியுள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் களமிறங்க இந்தியா தயாராகியுள்ளது.

இரண்டாவது போட்டி பொக்ஸிங் டே என வர்ணிக்கப்படும் நத்தார் பண்டிகைக்கு மறுநாள் மெல்போர்னில் ஆரம்பமாகவுள்ளது. இந்தப் போட்டிக்காக கடும் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ள இந்திய அணியில் பல மாற்றங்கள் ஏற்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

விராத் கோஹ்லிக்கு பதிலாக லோகேஸ் ராகுலுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. முதல் போட்டியில் பிரகாசிக்கத் தவறிய பிருத்திவ் ஸா, விக்கெட் காப்பாளர் விருத்மன் சாஹா ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டு அவர்களுக்குப் பதிலாக சுப்மன் கில், ரிஸப் பாண்ட் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் சமி காயம் காரணமாக விலகியதால் அவருடைய இடத்துக்கு நவ்தீப் சைனி அல்லது மொஹமட் ஸிராஜ் ஆகியோரில் ஒருவர் தெரிவுசெய்யப்படலாம். மெல்போர்னில் 5 பந்துவீச்சாளர்களுடன் இந்தியா களமிறங்க திட்டமிட்டுள்ளதாகவும் இதனால் முதல் போட்டியை இழந்த ரவீந்ர ஜடேஜாவும் இடம்பெற வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், பொக்ஸிங் டே கிரிக்கெட் என்பது அவுஸ்திரேலியர்கள் காலங்காலமாக ரசித்துவரும் டெஸ்ட் போட்டியாகும். மெல்போர்னில் இதற்காகவே அவுஸ்திரேலியர்கள் கூடுவது வழமையாகும். பண்டிகைக்கால கொண்டாட்டமாக நடைபெறும் இந்தப் போட்டியில் உள்நாட்டு ரசிகர்களை குதூகலப்படுத்த அவுஸ்திரேலிய வீரர்கள் கடும் பிரயத்தனம் எடுப்பார்கள்.

அந்த வகையில் எத்தனை மாற்றங்களை ஏற்படுத்தினாலும் இதுபோன்றதொரு வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியாவை அவ்வளவு இலகுவில் மடக்கிவிட முடியாது. டேவிட் வோனர் இந்தப் போட்டியில் இடம்பெறாவிட்டாலும் அவுஸ்திரேலிய அணி பலம் வாய்ந்ததாகவே உள்ளது.
எனவே, அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சை சமாளித்தால் மாத்திரமே இந்திய அணியால் சவால் விடுக்க முடியும் என்பது வெளிப்படையானது.