கிரிக்கெட்டின் பிதாமகர் என போற்றப்படும் அவுஸ்திரேலிய முன்னாள் ஜாம்பவான் மறைந்த சேர்.பிரட்மன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பயன்படுத்திய தொப்பி 2.5 கோடி ரூபாவுக்கு ஏலம் போயுள்ளது. அதனை அவுஸ்திரேலிய வர்த்தகர் ஒருவர் ஏலத்தில் வாங்கியுள்ளார்.
சேர்.பிரட்மன் தாம் அறிமுகமான 1928 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் இந்தத் தொப்பியை அணிந்து விளையாடியதாக குறிப்பிடப்படுகிறது. 1928 முதல் 1948 வரை விளையாடியுள்ள சேர்.பிரட்மன் அதிசிறந்த துடுப்பாட்ட சராசரியின் உலக சாதனையாளராக உள்ளார்.
52 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ள சேர்.பிரட்மன் 29 சதங்கள், 13 அரைச்சதங்களைக் குவித்துள்ளார். இதன்போது டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் அதிகபட்சமாக 334 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுள்ள அவர் மொத்தமாக 6996 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.
இதன்மூலம் 99.94 எனும் துடுப்பாட்ட சராசரியைப் பதிவுசெய்துள்ள சேர்.பிரட்மனின் உலக சாதனையை இதுவரை எவராலும் நெருங்க முடியவில்லை.
இதேவேளை, அவுஸ்திரேலிய முன்னாள் சுழல்பந்து ஜாம்பவான் ஷேன் வோர்ன் பயன்படுத்திய டெஸ்ட் தொப்பி ஐந்தரை கோடி ரூபாவுக்கு ஏலம் போயிருந்தது. அதன்படி அதிக தொகைக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட கிரிக்கெட் தொப்பியாக வோர்னின் தொப்பி முதலிடத்தையும், சேர்.பிரட்மனின் தொப்பி இரண்டாமிடத்தையும் பெற்றுள்ளன.