July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

புதுமுக வீரர்களுடன் இலங்கையை எதிர்கொள்ளும் தென் ஆபிரிக்கா

இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஏழு புதுமுக வீரர்களுடன் தென் ஆபிரிக்கா களமிறங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் ஆபிரிக்க அணியின் இரண்டு வீரர்கள் கொரோனா தொற்றுக்குள்ளானதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதென்றும் கூறப்படுகிறது.

இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி பொக்ஸிங் டே என அழைக்கப்படும் நத்தார் பண்டிகையின் மறுநாள் ஆரம்பமாகவுள்ளது. இதற்கான தென் ஆபிரிக்க வீரர்களுக்கு மூன்று தடவைகள் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதுடன், அதன்போது இருவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டு அவர்கள் நீக்கப்பட்டனர்.

ஆனாலும், எஞ்சிய 17 வீரர்களுக்கு தொற்று இல்லை என உறுதிசெய்யப்பட்டு அவர்கள் பாதுகாப்பு வலயத்தில் பயிற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் பியூரன் ஹென்ரிக்ஸ், கீகன் பெட்டர்சன் ஆகியோர் தொடரிலிருந்து விலகியுள்ளதாக தென் ஆபிரிக்க கிரிக்கெட் சபை கூறுகின்றது.

இதனால் குழாத்தில் இடம்பெற்றுள்ள ஏழு புதுமுக வீரர்களில் பலருக்கு போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதுமுக வீரர்கள் ஏழு பேரில் கிளென்டன் ஸ்டுர்மன், மிகெல் பிரிட்டோரியஸ், லுதோ சிபாம்ளா ஆகிய மூவரும் இதுவரை டெஸ்ட் அந்தஸ்து பெறாதவர்களாவர்.

அணியின் வேகப்பந்துவீச்சாளரான கெகிஸோ ரபாடா இந்தத் தொடரில் விலகியுள்ளதால் புதுமுக வேகப்பந்துவீச்சாளரை தேர்ந்தெடுத்து அறிமுக்கப்படுத்தும் நிலையில் தென்ஆபிரிக்கா உள்ளது.