January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாகிஸ்தானுக்கு ஆறுதல் வெற்றி

நியூஸிலாந்துக்கு விஜயம் செய்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சர்வதேச இருபது 20 தொடரில் ஆறுதல் வெற்றியைப் பெற்றது. முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றியீட்டியிருந்த நியூஸிலாந்து அணி தொடரை 2-0 என கைப்பற்றியது.

நேப்பியரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி சார்பாக மார்டின் கப்தில் – டிம் ஸெய்பர் ஜோடி 4.3 ஓவர்களில் 40 ஓட்டங்களைப் பகிர்ந்தது. மார்டின் கப்தில் 19 ஓட்டங்களையும், டிம் ஸெய்பர் 35 ஓட்டங்களையும் பெற்றனர்.

என்றாலும் அடுத்த இரண்டு விக்கெட்டுகளும் விரைவாக வீழ்த்தப்பட நியூஸிலாந்து அணி சற்று பின்னடைவுக்குள்ளானது. சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய டெவோன் கொன்வே 63 ஓட்டங்களையும், கிலென் பிலிப்ஸ் 31 ஓட்டங்களையும் பெற்று அணியை சவாலான நிலைக்கு கொண்டுவந்தனர்.

நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 173 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் பஹீம் அஸ்ரப் 3 விக்கெட்டுகளையும், சஹீன் அப்ரிடி ஹாரிஸ் ரவுப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

174 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய பாகிஸ்தான் சார்பிலும் முதல் விக்கெட்டுக்காக 40 ஓட்டங்கள் பகிரப்பட்டதுடன் அதற்கு அவர்களுக்கு 5.2 ஓவர்கள் சென்றன. ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான ஹெய்டர் அலி 11 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

அபாரமாகத் துடுப்பெடுத்தாடிய மொஹமட் ரிஸ்வான் 59 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 10 பௌண்டரிகளுடன் 89 ஓட்டங்களைக் குவித்தார். மொஹமட் ஹாபிஸ் 3 சிக்ஸர்கள், 2 பௌண்டரிகளுடன் 41 ஓட்டங்களைப் பெற்றார்.

இடையிடையே விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டாலும் அது பாகிஸ்தான் அணிக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இப்திகார் அஹமட் ஒரு சிக்ஸர், ஒரு பௌண்டரியுடன் 14 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுக்க பாகிஸ்தான் அணி 19.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது.

கடைசி போட்டியின் சிறப்பாட்டக்காரர் விருதை மொஹமட் ரிஸ்வானும், தொடரின் சிறந்த வீரர் விருதை டிம் ஸெய்பரும் பெற்றனர்.