இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட ஆலோசகராக தென் ஆபிரிக்காவின் ஜக் கலிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை இங்கிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
இலங்கை விஜயத்தின் போது இங்கிலாந்து அணி வீரர்களை துடுப்பாட்டத்தில் பலப்படுத்துவதற்காக துடுப்பாட்ட ஆலோசகர் பொறுப்பு ஜக் கலிஸிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல் இருபது20 போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு பயிற்றுநராக செயற்பட்ட அனுபவம் 45 வயதுடைய ஜக் கலிஸுக்கு இருக்கிறது.
இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்றுநராக கிறிஸ் சில்வர்வூட் செயற்படுவதுடன், உதவி பயிற்றுநராக முன்னாள் வீரரான போல் கொலிங்வூட் உள்ளார். இவர்களுடன் இணைந்து அணியின் துடுப்பாட்டத்தை கலிஸ் மேம்படுத்தவுள்ளார்.
இங்கிலாந்து அணி ஏற்கனவே விக்கெட் காப்பு ஆலோசகர், களத்தடுப்பு ஆலோசகர், பந்துவீச்சு பயிற்றுநர், சுழல்பந்துவீச்சு ஆலோசகர் ஆகியோரை தன்னகத்தே வைத்துள்ளது.
இங்கிலாந்து அணி ஜனவரியில் இலங்கையுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளதுடன், அந்த இரண்டு போட்டிகளும் காலியில் நடைபெறவுள்ளன. அதன் பிறகு இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு விஜயம் செய்து அங்கும் கிரிக்கெட் தொடர்களில் பங்குபற்றவுள்ளது.
எவ்வாறாயினும், தற்போதைக்கு இலங்கை தொடருக்கு மாத்திரமே ஜக் கலிஸ் பெயரிடப்பட்டுள்ளார்.
தென் ஆபிரிக்கா சார்பாக 1995 ஆம் ஆண்டு முதல் 2013 வரை விளையாடியுள்ள ஜக் கலிஸ் துடுப்பாட்டத்தில் 13 ஆயிரத்து 289 ஓட்டங்களைக் குவித்து டெஸ்ட் அரங்கில் அதிக ஓட்டங்களைப் பெற்றவர்களில் மூன்றாமிடத்தை வகிக்கிறார். பந்துவீச்சில் அவர் 292 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.