July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய- ஆஸி தொடர்: வேதனையை சொல்ல வார்த்தைகள் இல்லை – கோஹ்லி

Photo:Virat Kohli/Facebook)

நேற்றைய டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தோல்வியடைந்த விதம் மிகுந்த கவலைக்குரியது. அந்த வேதனையை சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை என்று இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

இந்திய- அவுஸ்திரேலிய முதல் டெஸ்ட் போட்டியில் படுதோல்வியடைந்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போதே  அவர் இதனைத் தெரிவித்தார்.

அடிலெய்டில் பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்ற இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 244 ஓட்டங்களையும், அவுஸ்திரேலியா 191 ஓட்டங்களையும் பெற்றது.

53 ஓட்டங்கள் முன்னிலையுடன் மூன்றாம் நாளில் இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி ஒரு மணித்தியாலயத்திற்குள் 36 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்திய அணியின் இரண்டாம் இன்னிங்ஸில் ஒரு வீரரால் கூட இரட்டை இலக்க ஓட்ட எண்ணிக்கையை அடைய முடியவில்லை.

இது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் நீண்டதொரு இடைவெளியின் பின்னர் பதிவான இரண்டாவது சந்தர்ப்பமாகும்

இதற்கு முன்பு 1924 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தென்ஆபிரிக்க அணி வீரர்கள் சகரும் ஒற்றை இலக்குடன் ஆட்டமிழந்துள்ளனர்.

போட்டியில் 90 ஓட்டங்களை நோக்கி இரண்டாம் இன்னிங்ஸில் பதிலளித்தாடிய அவுஸ்திரேலியா 21 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு வெற்றியை அடைந்தது.

இந்த மோசமான தோல்வியின் பின்னர் கோஹ்லி தனது மனவருத்தத்தை தெரிவித்தார்.

இரண்டு நாட்கள் சிறப்பாக விளையாடிய போதிலும் ஒரு மணித்தியாலயத்திற்குள் அத்தனையும் இழந்துவிட்டோம் என்றும் இந்தத் தோல்வி மிகுந்த வேதனையளிக்கிறது எனவும் குறிப்பிட்டார்.

முதல் இன்னிங்ஸில் முன்னிலைப் பெற்றும் ஓட்டங்களைப் பெற்றுக்கொள்ளும் அவசரத்தில் வீரர்கள் ஆட்டமிழந்து விட்டதாகவும் இதனை நினைக்கும் போதெல்லாம் இதனைவிட சிறப்பாக செயற்பட்டிருக்கலாமென இப்போது சிந்திப்பதாகவும் விராட் கோஹ்லி கூறினார்.

எவ்வாறாயினும், தோல்வியில் பாடங்களைக் கற்றுக்கொண்டு அடுத்த போட்டியில் தவறுகளை திருத்திக்கொண்டு வீரர்கள் விளையாடுவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

விராட் கோஹ்லி இந்தப் போட்டியுடன் நாடு திரும்புவதால் அடுத்த மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் அஜின்கெயா ரஹானே அணித்தலைவராக செயற்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.