போர்மியூலா வன் கார் பந்தயத்தின் கடைசிக் கட்டமான அபுதாபி க்ரோண்ப்றீயில் மக்ஸ் வெட்ஸபன் வெற்றியீட்டினார்.
உலகப் பிரசித்திபெற்ற காரோட்டமான போர்மியூலா வன் பந்தயம் வருடாந்தம் 21 க்றோண்ப்றீக்கள் வரை நடத்தப்படும். இந்தப் பந்தயத்தில் ஒவ்வொரு க்றோண்ப்றீயிலும் முதலிடம் பிடிக்கும் வீரருக்கு வெற்றிக்கிண்ணம் பரிசளிக்கப்பட்டு புள்ளிகள் வழங்கப்படும். 21 க்றோண்ப்றீக்களின் முடிவில் அதிக புள்ளிகளைப் பெற்றவர் உலக சாம்பியனாவார்.
எவ்வாறாயினும் இவ்வருடம் கொரோனா முடக்கம் காரணமாக சில க்றோண்ப்றீக்கள் கைவிடப்பட்டன. நடத்தப்பட்ட க்றோண்ப்றீக்களின் அடிப்படையில் பிரித்தானியாவின் லூவிஸ் ஹெமில்டன் ஏற்கனவே உலக சாம்பியன் பட்டத்துக்கு தகுதிபெற்றுவிட்டார்.
இந்நிலையில் கடைசிக் கட்டமாக அபுதாபி க்றோண்ப்றீ நடைபெற்றது. பந்தயத்தில் பெல்ஜியத்தின் மக்ஸ் வெட்ஸபன் முதலிடத்தைக் கைப்பற்றினார். இது இவ்வருடத்தில் போர்மியூலா வன் கார் பந்தயத்தில் அவர் பெற்ற இரண்டாவது க்றோண்ப்றீ வெற்றியாகும்.
அபுதாபி க்றோண்ப்றீயில் பின்லாந்தின் வெலடரி பொட்டாஸ் இரண்டாமிடத்தையும், லூவிஸ் ஹெமில்டன் மூன்றாமிடத்தையும் அடைந்தனர்.
இதேவேளை, கொரோனா தொற்றுப் பாதிப்பு, தனிமைப்படுத்தல் ஆகியவற்றின் பின்னர் லூவிஸ் ஹெமில்டன் பங்கேற்ற பந்தயம் இதுவென்பதுடன், கொவிட் 19 தொற்றிலிருந்து மீண்டுவந்து போட்டியிட்டமைக்கு அவர் மகிழ்ச்சியும் வெளியிட்டார்.