எல்.பி.எல் இருபது 20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் மற்றும் தம்புள்ள வைகிங் அணிகள் விளையாடவுள்ளன.
இந்தப் போட்டி 14 ஆம் திகதி இலங்கை நேரப்படி இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
எல்.பி.எல் இருபது 20 கிரிக்கெட் தொடரில் இடம்பெற்றுள்ள பலம் வாய்ந்த இரண்டு அணிகளாகவே ஜப்னா ஸ்டாலியன்ஸும், தம்புள்ள வைகிங்கும் காணப்படுகின்றன.
ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியை சகலதுறை வீரரான திசர பெரேரா வழிநடத்துகின்றார். தம்புள்ள வைகிங் அணியின் தலைவராக தசுன் சானக செயற்படுகிறார்.
சகலதுறைகளிலும் சம பலம் வாய்ந்த அணியாகவே ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி உள்ளது. இருபது 20 போட்டிகளுக்கு பரிபூரணமாக தலைவராக திசர பெரேரா இருக்கிறார். ஜொன்சன் சாள்ஸ், தனஞ்சய டி சில்வா, வனிந்து ஹசரங்க, அவிஸ்க பெர்னாண்டோ, சுரங்க லக்மால், சொஹைப் மாலிக் ஆகிய சர்வதேச அனுபவமிக்க வீரர்கள் ஜப்னா அணியில் உள்ளனர். இவர்களுடன் யாழ்ப்பாணத்து வீரரான விஜயகாந்த் வியாஸ்காந்தும் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தம்புள்ள வைகிங் அணியில் நிரோஸன் திக்வெல்ல, ஏஞ்சலோ பெரேரா, சமித் பட்டேல் ஆகிய அதிரடி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களுடன் சிரேஸ்ட வீரரான உபுல் தரங்கவும் தம்புள்ள அணியில் இருக்கின்ற போதிலும் இதுவரை அவர் பெரிதாக எதனையும் சாதிக்கவில்லை.
என்றாலும், கொழும்பு கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் சுற்றுப் போட்டியில் 204 ஓட்டங்கள் இலக்கை தம்புள்ள வைகிங் அணி 19 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு கடந்து வெற்றிபெற்றுள்ளது. இது இவர்களின் துடுப்பாட்ட பலத்தை காட்டுகின்றது.
எனவே, இந்தப் போட்டியில் களத்தடுப்பில் சிறந்த ஆளுமையை வெளிப்படுத்தும் அணிக்கே அதிகளவான வெற்றி வாய்ப்பு உண்டென கணிக்கப்பட்டுள்ளது. எது எவ்வாறாக இருந்தாலும் போட்டி இறுதிப் பந்துவரை விறுவிறுப்பாக நீடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.