November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘அவுஸ்திரேலியா அணி முன்பைவிட பலம் வாய்ந்துள்ளது’

photo:Sachintendulkar/facebook

முன்பைவிட பலம் வாய்ந்த அணியாக அவுஸ்திரேலியா இருப்பதாக இந்திய கிரிகட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட நட்சத்திரமான சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

2018-19 ஆம் ஆண்டு பருவகாலத்தில் அவுஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 என கைப்பற்றியது.என்றாலும் அந்த அணியைவிட தற்போதைய அவுஸ்திரேலிய டெஸ்ட் அணி பலம் வாய்ந்ததாக இருக்கிறது.

டேவிட் வோனர், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லபுசேன் ஆகியோர் இந்த முறை இந்திய அணிக்கு கடும் சவாலாக இருப்பார்கள் என்றும் சச்சின் டெண்டுல்கர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், டேவிட் வோனர் உபாதை காரணமாக முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து விலகிக்கொண்டமையும் இங்கு நினைவுகூரத்தக்கது.

அனுபவ வீரர்கள் அணியில் இடம்பெறாத சந்தர்ப்பத்தில் அதனால் ஏற்படும் வெற்றிடத்தை அறிய முடியும். அந்த நிலைமை கடந்தமுறை அவுஸ்திரேலியாவுக்கு ஏற்பட்டது. தற்போது இந்தியாவுக்கு அவ்வாறான நிலைமை உருவாகலாம்.

அணித்தலைவர் விராத் கோஹ்லி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இடம்பெற வாய்ப்பில்லாத நிலைமை ஏற்பட்டுள்ள நிலையில் சச்சின் இந்தக் கருத்தைக் கூறியுள்ளார்.

அத்துடன் இந்திய டெஸ்ட் அணியில் தமிழக வீரரான நடராஜனை இணைத்தாலும் சிறப்பாக இருக்கும் என்றும் சச்சின் கூறியுள்ளார்.அவர் சிறப்பாக பந்துவீசுகிறார் என்றும் அவருக்கு சிறந்த எதிர்காலம் உண்டெனவும் சச்சின் கணித்துள்ளார்.