
எல்.பி.எல் இருபது 20 கிரிக்கெட் தொடரில் பரபரப்பான முதல் அரை இறுதிப் போட்டியில் கொழும்பு கிங்ஸ் அணியை தோற்கடித்த காலி கிளாடியேட்டர்ஸ் முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது.
ஹம்பாந்தோட்டையில் மின்னொளியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு கிங்ஸ் அணி 3 ஓட்டங்கள் பெற்றிருந்த நிலையில் முதல் விக்கெட்டை இழந்தது. அணித்தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ், டினேஸ் சந்திமால், ஆன்ரே ரஸல் ஆகியோரும் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
என்றாலும், வெளிநாட்டு வீரரான டேனியல் பெல் ட்ரம்மன்டின் அபார திறமை காரணமாக கொழும்பு கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 150 ஓட்டங்கள் எனும் சவாலான இலக்கை அடைந்தது. டேனியல் பெல் ட்ரம்மன்ட் 3 சிக்ஸர்கள், 7 பௌண்டரிகளுடன் 70 ஓட்டங்களைப் பெற்றார்.
லக்ஸான் சந்தகேன் 3 விக்கெட்டுகளையும், நுவன் துஸார, தனஞ்சய லக்ஸான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
வெற்றி இலக்கான 151 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய காலி கிளாடியேட்டர்ஸ் அணியின் முதலிரண்டு விக்கெட்டுகளும் 17 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட அணியின் நிலைமை சற்று பரிதாபமானது. நம்பிக்கைக்குரிய வீரரான தனுஸ்க குணதிலக 13 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
அணித்தலைவர் பானுக ராஜபக்ஸ 2 சிக்ஸர்கள், 3 பௌண்டரிகளுடன் 33 ஓட்டங்களையும், அசாம் கான் 21 ஓட்டங்களையும், ஸெஹான் ஜயசூரிய 22 ஓட்டங்களையும் பெற்று வெற்றியீட்டும் நம்பிக்கையை உருவாக்கினர்.
காலி அணி வெற்றிபெற கடைசி ஓவரில் 15 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் தனஞ்சய லக்ஸானும், லக்ஸான் சந்தகேனும் சிறப்பாக ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றியை உறுதிசெய்தனர். அந்த ஓவரில் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பௌண்டரி விளாசப்பட்டது.
சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய தனஞ்சய லக்ஸான் 31 ஓட்டங்களையும், லக்ஸான் சந்தகேன் 4 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்று வெற்றியை உறுதிசெய்தனர். காலி கிளாடியேட்டர்ஸ் அணி 19.5 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு வெற்றியை எட்டியது.
இந்த வெற்றிக்கு அமைவாக எதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெறும் எல்.பி.எல் இருபது 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் காலி அணி விளையாடவுள்ளது.