இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் திட்டமிட்டபடி நடைபெறும் என இரண்டு நாடுகளின் கிரிக்கெட் நிறுவனங்களும் அறிவித்துள்ளன.
இலங்கை கிரிக்கெட் அணி அடுத்த வாரம் தென் ஆபிரிக்காவுக்கு விஜயம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க ஏற்கனவே திட்டமிடப்பட்டது. எனினும். அந்த தொடர் நடைபெறுமா எனும் சந்தேகம் சமீபத்தில் எழுந்திருந்தது.
தென்னாபிரிக்காவுக்கு சென்றிருந்த இங்கிலாந்து அணி கொவிட் 19 அச்சம் காரணமாக சர்வதேச ஒருநாள் தொடரில் பங்கேற்காமல் நாடு திரும்பியதே அதற்குக் காரணம். சர்வதேச இருபது20 தொடரை இங்கிலாந்து கைப்பற்றியதுடன் ஒருநாள் தொடர் கடந்த 4 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்தது.
எனினும் வீரர்கள் ஓரிருவருக்கும் ஹோட்டல் பணியாளர்களுக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால் இரண்டு நாடுகளுமே சர்வதேச ஒருநாள் தொடரை ஒத்திவைப்பதற்கு இணக்கம் தெரிவித்தன.
இதனால் இலங்கை அணியின் விஜயத்துக்கு என்ன நடக்கும் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்திருந்தது. ஆனாலும். டெஸ்ட் தொடர் திட்டமிட்டபடி எதிர்வரும் 26 ஆம் திகதி தென்னாபிரிக்காவில் ஆரம்பிக்கப்படும் என அந்நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இந்தத் தகவலை இலங்கை கிரிக்கெட் நிறுவனமும் உறுதிசெய்துள்ளது.
எவ்வாறாயினும், டெஸ்ட் தொடரில் விளையாடும் அணி வீரர்களின் விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.