January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எல்.பி.எல்; அரை இறுதியை உறுதிசெய்தது காலி

எல்.பி.எல் இருபது 20 கிரிக்கெட் தொடரில் நான்காவது அணியாக காலி கிளாடியேட்டர்ஸ் அணி அரை இறுதிக்கு தகுதிபெற்றது. கண்டி டஸ்கர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் காலி அணிக்கு இந்த வாய்ப்பு கிட்டியது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கண்டி டஸ்கர்ஸ் அணி 19.1 ஓவர்களில் 126 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. அணி சார்பாக குசல் மென்டிஸ் 4 சிக்ஸர்கள், 6 பௌண்டரிகளுடன் 68 ஓட்டங்களைப் பெற்றார்.

மொஹமட் அமீர், துஸார, லக்ஸான், எஸ்.டி ஆராய்ச்சிகே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பதிலளித்தாடிய காலி கிளாடியேட்டர்ஸ் அணிக்கு தனுஸ்க குணதிலக சிறந்த ஆரம்பத்தைப் பெற்றுக்கொடுத்தார். முதல் விக்கெட்டுக்காக அவர் ஹஸருல்லா ஸஸாயுடன் இணைந்து 14.3 ஓவர்களில் 101 ஓட்டங்கள் குவித்து பங்களிப்பு வழங்கினார்.

ஹஸருல்லா ஸஸாய் 20 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தாலும் தனுஸ்க குணதிலக 66 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 12 பௌண்டரிகளுடன் 94 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் குவித்து வெற்றியை உறுதிசெய்தார்.

காலி கிளாடியேட்டர்ஸ் அணி 17 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு வெற்றியை அடைந்து தனது இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்தது. இதன் மூலம் 4 புள்ளிகளைப் பெற்று நான்காமிடத்துடன் அரை இறுதிக்குள் நுழைந்தது.

கண்டி மற்றும் காலி அணிகள் தலா 4 புள்ளிகளைப் பெற்றுள்ள போதிலும் நிகர ஓட்ட வேகத்தின் அடிப்படையில் காலி அணி முன்னிலை அடைந்து அரை இறுதிக்கு தகுதிபெற்றதும் இங்கு குறிப்பிடத்தக்கது.