
எல்.பி.எல் இருபது 20 கிரிக்கெட் தொடரில் சதமடித்த முதல் வீரராக கொழும்பு கிங்ஸ் அணியின் லூவிஸ் இவென்ஸ் பதிவானார். ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் சதமடித்தார்.
எல்.பி.எல் இருபது 20 கிரிக்கெட் தொடரில் லீக் சுற்றில் தமது கடைசி போட்டியில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் மற்றும் கொழும்பு கிங்ஸ் அணிகள் விளையாடின.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு கிங்ஸ் அணி 18 ஓட்டங்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது. ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான டினேஸ் சந்திமால் 11 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
என்றாலும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய லூவிஸ் இவென்ஸ் சதமடித்து கொழும்பு கிங்ஸ் அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினார்.
65 பந்துகளை எதிர்கொண்ட அவர் 5 சிக்ஸர்கள், 9 பௌண்டரிகளுடன் 108 ஓட்டங்களை விளாச, கொழும்பு கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 173 ஓட்டங்களைப் பெற்றது.
வெற்றி இலக்கான 174 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி ஆரம்பம் முதலே ஓட்டங்களைப் பெற முடியாமல் சிரமத்துக்குள்ளானது.
ச்சரித் அசலங்க 32 ஓட்டங்களையும் சொஹைப் மாலிக் 29 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றனர். ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 167 ஓட்டங்களைப் பெற்று 6 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
பந்துவீச்சில் ஒன்ரே ரஸல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த வெற்றியானது கொழும்பு கிங்ஸ் அணி பெற்ற நான்காவது வெற்றி என்பதுடன் இதன்மூலம் அவர்கள் லீக் சுற்றில் 10 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தைப் பிடித்தனர். ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி 9 புள்ளிகளுடன் மூன்றாமிடத்திலுள்ளது.