தமிழக வீரரான நடராஜன் இருபது 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடருக்காக இந்திய அணிக்கு கிடைத்த சொத்து என அணித்தலைவர் விராத் கோஹ்லி புகழ்ந்துள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான சர்வதேச இருபது 20 தொடரில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய நடராஜன் தொடர் வெற்றிக்கு முக்கிய காரணகர்த்தாவாக திகழ்ந்தார். இதனையடுத்து இந்திய கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் நடராஜனை புகழ்ந்த வண்ணமுள்ளனர்.
தொடர் வெற்றியின் பின்னர் கருத்து வெளியிட்ட இந்திய அணித்தலைவர் விராத் கோஹ்லி,
நடராஜன் எதிர்வரும் இருபது 20 உலகக் கிண்ணத் தொடருக்கான இந்திய அணியின் சொத்து என குறிப்பிட்டார்.
பும்ராவும், சமியின் இல்லாத சந்தர்ப்பத்தில் நடராஜன் சிறப்பாக விளையாடினார். நெருக்கடியான சந்தர்ப்பத்தில் அவர் நிலைத்து நின்று திறமையை வெளிப்படுத்தினார். அவர் மிகவும் தன்னம்பிக்கை மிக்கவராகவும், பணிவு கொண்டவராகவும் இருக்கிறார். இடக்கை வேகப்பந்துவீச்சாளர்கள் எப்போதுமே அணிக்கு சொத்து என விராத் கோஹ்லி மேலும் கூறினார்.
இதேவேளை, இருபது20 தொடரின் சிறந்த வீரர் விருதை வென்ற ஹர்திக் பாண்ட்யா தனது வெற்றிக் கிண்ணங்களை நடராஜனிடம் கொடுத்து அழகு பார்த்தமையும் குறிப்பிடத்தக்கது.