January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எல்.பி.எல்; தம்புள்ளையிடம் வீழ்ந்தது காலி

எல்.பி.எல் இருபது 20 கிரிக்கெட் தொடரில் காலி கிளாடியேட்டர்ஸ் அணி அரைஇறுதிக்கு தகுதிபெறுவது சந்தேகத்திற்கிடமாகியுள்ளது. தம்புள்ள அணிக்கு எதிரான போட்டியில் காலி கிளாடியேட்டர்ஸ் தோல்வியடைந்ததே அதற்கு காரணம்.

எல்.பி.எல் இருபது20 கிரிக்கெட் தொடரில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்துடன் தம்புள்ள வைகிங் அணியை காலி கிளாடியேட்டர்ஸ் அணி எதிர்கொண்டது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய காலி கிளாடியேட்டர்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 168 ஓட்டங்களைப் பெற்றது.

தனுஸ்க குணதிலக 46 ஓட்டங்களையும், அணித்தலைவர் பானுக ராஜபக்ஸ 31 ஓட்டங்களையும், ஸெஹான் ஜயசூரிய 39 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றனர்.

கசுன் ராஜித, மென்டிஸ், தசுன் ஸானக ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பதிலளித்தாடிய தம்புள்ள வைகிங் அணி முதல் பந்திலேயே முதல் விக்கெட்டை இழந்தது. பேல் ஸ்ரேலிங் ஓட்டமின்றி ஆட்டமிழந்தார். தொடர்ந்து உபுல் தரங்க, அணித்தலைவர் தசுன் ஸானக ஆகியோர் தலா 9 ஓட்டங்களுடன் வெளியேறினர்.

நிரோஸன் திக்வெல்ல 38 ஓட்டங்களையும், ஏஞ்சலோ பெரேரா 45 ஓட்டங்களையும் பெற்று வெற்றியீட்டும் நம்பிக்கைக்கு உந்துசக்தி அளித்தனர். இறுதி நேரத்தில் அதிரடி காட்டிய ஸமியுல்லா சின்வாரி – மென்டிஸ் இவர்கள் 20 பந்துகளில் 41 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றிக்கு வித்திட்டனர்.

ஸமியுல்லா சின்வாரி 20 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 6 பௌண்டரிகளுடன் 40 ஓட்டங்களையும், மென்டிஸ் ஒரு சிக்ஸர், ஒரு பௌண்டரியுடன் 13 ஓட்டங்களையும் வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

6 விக்கெட்டுகளை இழந்து தம்புள்ள வைகிங் அணி கடைசி பந்தில் வெற்றியை அடைந்தது. இந்த வெற்றியுடன் புள்ளிகள் பட்டியலில் தம்புள்ள அணி முதலிடத்துக்கு முன்னேறியது.

காலி அணியின் தோல்வியானது அரை இறுதி மீதான எதிர்பார்ப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது. காலியும், கண்டியும் விளையாடும் போட்டியே அரை இறுதிக்கு தகுதிபெறும் நான்காவது அணியை தீர்மானிக்க வல்லதாய் மாறியுள்ளது.