
எல்.பி.எல் இருபது20 கிரிக்கெட் தொடரில் ஆரம்பத்தில் அடுத்தடுத்து வெற்றிகளைப் பெற்ற ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி இரண்டாவது தோல்வியை சந்தித்துள்ளது. இந்தத் தடவை ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியை 6 விக்கெட்டுகளால் கண்டி டஸ்கர்ஸ் அணி வெற்றிகொண்டது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி வழமைக்கு மாறாக ஆரம்பம் முதலே தடுமாற்றத்துக்குள்ளாகி 4.4 ஓவர்களில் 42 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது.
எனினும், பொறுமையாகத் துடுப்பெடுத்தாடிய சொஹைப் மாலிக் ஒரு சிக்ஸர், 5 பௌண்டரிகளுடன் 59 ஓட்டங்களைப் பெற்று அணியை சவாலான நிலைக்கு கொண்டுவந்தார்.
மினோத் பானுக 21 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுக்க அணித்தலைவர் திசர பெரேரா ஓர் ஓட்டத்துடன் வெளியேறினார். யாழ்ப்பாணத்து வீரரான விஜயகாந்த் வியான்காந்த் 7 பந்துகளில் ஒரு பௌண்டரியுடன் 8 ஓட்டங்களைப் பெற்று கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.
ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி 20 ஓவர்களில் 150 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
பந்துவீச்சில் நுவன் பிரதீப் 3 விக்கெட்டுகளையும், டேல் ஸ்டேன், வினுர பெர்னாண்டோ, அசேல குணரத்ன ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
வெற்றி இலக்கான 151 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய கண்டி டஸ்கர்ஸ் அணி 6 ஓவர்களில் 44 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட சற்று இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டது. என்றாலும் அணித்தலைவர் குசல் ஜனித் பெரேரா 42 ஓட்டங்களைப் பெற்று ஆறுதல் அளித்தார்.
தொடர்ந்து இணைந்த அசேல குணரத்ன மற்றும் இர்பான் பதான் ஜோடி சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது. இவர்கள் வீழ்த்தப்படாத ஐந்தாம் விக்கெட்டுக்காக 35 பந்துகளில் 56 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றியை உறுதிசெய்தது.
அசேல குணரத்ன 37 பந்துகளில் ஒரு சிக்ஸர், 5 பௌண்டரிகளுடன் 52 ஓட்டங்களையும், இர்பான் பதான் 25 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றனர். கண்டி டஸ்கர்ஸ் அணி 19.1 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு வெற்றியை அடைந்தது.
விஜகாந்த் வியாஸ்காந்த் 2 ஓவர்களை பந்துவீசி 18 ஓட்டங்களை விட்டுக்கொடுத்த போதிலும் அவரால் விக்கெட் வீழ்த்த முடியவில்லை. இந்த வெற்றியின் மூலம் கண்டி டஸ்கர்ஸ் அணியின் அரைஇறுதி எதிர்பார்ப்பு வலுப்பெற்றுள்ளது. அவர்கள் 4 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் உள்ளனர்.