இந்தியாவுக்காக பங்கேற்ற முதல் சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடரை வென்றமையை வாழ்நாளில் மறக்க முடியாது என தமிழக வீரரான நடராஜன் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்த இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரரான 29 வயதுடைய நடராஜன் யோர்க்கர் பந்துகளை வீசுவதில் வல்லவராகத் திகழ்கிறார். சமீபத்தில் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் நடைபெற்ற ஐ.பி.எல் போட்டிகளில் ஆற்றலை வெளிப்படுத்தியதன் மூலம் இவருக்கு இந்தமுறை இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது.
வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொண்ட நடராஜன் அறிமுக சர்வதேச இருபது 20 போட்டியில் 3 விக்கெட்டுகளையும், அடுத்த போட்டியில் 2 விக்கெட்டுகளையும், கடைசி போட்டியில் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி இந்திய அணியின் தொடர் வெற்றியில் பங்கெடுத்தார்.
இந்தத் தொடரையும், இதில் தமது பங்களிப்பையும் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாதென நடராஜன் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார். என் தேசத்துக்காக பங்கேற்ற முதல் தொடரை வென்றதனை மறக்க முடியாது எனவும் அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதேவேளை, நடராஜனின் பந்துவீச்சை முன்னாள் அவுஸ்திரேலிய வேகப்பந்துவீச்சு நட்சத்திரமான கிளென் மெக்ராத் பாராட்டியுள்ளார். நடராஜனின் பந்துவீச்சு தம்மை மிகவும் கவர்ந்துள்ளதாகவும் அவர் இந்திய அணியில் நிரந்தர இடத்தைப் பிடிப்பார் என்றும் மெக்ராத் குறிப்பிட்டுள்ளார்.