October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆஸி.க்கு ஆறுதல் வெற்றி; தொடர் இந்தியா வசம்

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவதும், இறுதியுமான சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 12 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. போட்டியில் அவுஸ்திரேலியா நிர்ணயித்த 187 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய இந்திய அணியால் 20 ஓவர்களில் 174 ஓட்டங்களையே பெற்றுக்கொள்ள முடிந்தது.

சிட்னியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாய அவுஸ்திரேலிய அணி 14 ஓட்டங்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது. அணித்தலைவர் ஏரோன் பிஞ்ச் ஓட்டமின்றி ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஸ்டீவன் ஸ்மித் 24 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

ஆனாலும், மெத்திவ் வேட் மற்றும் கிளென் மெக்ஸ்வெல் 52 பந்துகளில் 90 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை வலுப்படுத்தியது.
மெத்திவ் வேட் 2 சிக்ஸர்கள், 7 பௌண்டரிகளுடன் 80 ஓட்டங்களையும், கிளென் மெக்ஸ்வெல் 3 சிக்ஸர்கள், 3 பௌண்டரிகளுடன் 54 ஓட்டங்களையும் பெற்றனர்.

அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 186 ஓட்டங்களைப் பெற்றது.

பந்துவீச்சில் வொசிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளையும், நடராஜன், தாகூர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

187 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய இந்திய அணி முதல் ஓவரிலேயே முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. லோகேஸ் ராகுல் ஓட்டமின்றி ஆட்டமிழந்தார்.

என்றாலும் ஷிகர் தவான் மற்றும் அணித்தலைவர் விராத் கோஹ்லி ஜோடி இரண்டாம் விக்கெட்டுக்காக 74 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை வலுப்படுத்தியது. ஷிகர் தவான் 28 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது ஸ்வெப்சனின் அபார பிடியெடுப்பில் ஆட்டமிழந்தார்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹர்திக் பாண்ட்யாவினால் 20 ஓட்டங்களையே பெற முடிந்தது. அபாரமாகத் துடுப்பெடுத்தாடிய அணித்தலைவர் விராத் கோஹ்லி 3 சிக்ஸர்கள், 4 பௌண்டரிகளுடன் 85 ஓட்டங்களைப் பெற்று சவாலான தருணத்தில் ஆட்டமிழந்தார்.

இந்திய அணி வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு இருந்த போதிலும் களத்தடுப்பில் திறமையை வெளிப்படுத்திய அவுஸ்திரேலிய அணி வீரர்கள் சிறப்பாக பிடிகளை எடுத்து வெற்றியை தமதாக்கினர்.

தாகூர் 2 சிக்ஸர்களுடன் 17 ஓட்டங்களைப் பெற்ற போதிலும் அது வெற்றிக்கு போதுமானதாக இல்லை. இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 174 ஓட்டங்களை பெற்று 12 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

மிச்செல் ஸ்வப்சென் போட்டியின் சிறப்பாட்டக்காரராகவும், ஹர்திக் பாண்ட்யா தொடரின் சிறந்த வீரராகவும் தெரிவுசெய்யப்பட்டனர்.

தொடரை 2-1 எனும் ஆட்டக் கணக்கில் இந்தியா கைப்பற்றியது.