அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது சர்வதேச இருபது 20 போட்டியையும் வெற்றிகொண்டு தொடரை இந்தியா வைட் வோஷ் செய்யுமா எனும் எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மேலோங்கியுள்ளது. தொடரில் முதல் போட்டியை 11 ஓட்டங்களாலும், இரண்டாவது போட்டியை 6 விக்கெட்டுகளாலும் இந்திய அணி வென்றது.
இந்த நிலையில் மூன்றாவதும் இறுதியுமான சர்வதேச இருபது 20 போட்டி சிட்னியில் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. இந்தப் போட்டிக்காக இரண்டு அணிகளின் வீரர்களும் இறுதிக்கட்ட பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்திய அணியைப் பொறுத்தவரை சர்வதேச இருபது 20 அரங்கில் தொடர்ச்சியாக 10 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ள நிலையில், அவுஸ்திரேலியாவுடனான இந்தப் போட்டியை எதிர்கொள்ள தயாராகியுள்ளது.
இந்திய அணியின் துடுப்பாட்டம், பந்துவீச்சு, களத்தடுப்பு என்பன சமபலம் வாய்ந்ததாக இருக்கின்றது. லோகேஷ் ராகுல், ஷிக்கர் தவான், அணித்தலைவர் விராத் கோஹ்லி, ஹர்திக் பாண்டியா, ஸ்ரேயார்ஸ் ஐயர் ஆகியோர் வலுவான துடுப்பாட்ட வீரர்களாக திகழ்கின்றனர். இவர்களை குறைந்த ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தினாலே அவுஸ்திரேலிய அணியால் சிறந்ததொரு சவாலை விடுக்கமுடியும்.
பந்துவீச்சிலும் இந்திய அணியின் தரம் சிறப்பாகவே உள்ளது. தமிழக வீரரான நடராஜன், யுஷ்வேந்திர ஷஹால், தீபக் சாகூர் ஆகியோர் சிறப்பாக பந்துவீசி கடந்த போட்டிகளில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு வழங்கியுள்ளனர். அவர்கள் இந்தப் போட்டியிலும் பிரகாசிக்கும் பட்சத்தில் அவுஸ்திரேலிய அணியால் இலகுவாக எதனையும் சாதிக்க முடியாது.
அவுஸ்திரேலிய அணியைப் பொறுத்தமட்டில் துடுப்பாட்டத்தில் சோபை இழந்துள்ளது. ஸ்டீவன் ஸ்மித், கிளென் மெக்ஸ்வெல், மெதிவ் வேட் ஆகியோர் மாத்திரமே நம்பிக்கைக்குரிய துடுப்பாட்ட வீரர்களாக உள்ளனர். அவர்களாலும் கடந்த இரண்டு போட்டிகளில் பெரிதாக பிரகாசிக்க முடியாது போனதால் அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்டம் கேள்விக்குறியாகியுள்ளது.
எவ்வாறாயினும் மூன்றாவது போட்டியிலும் தோல்வியடைந்து தொடரை முற்றுமுழுதாக இழந்து தமக்கு ஏற்படும் அவப்பெயரை தவிர்த்துக்கொள்ளவே அவுஸ்திரேலியா முழுமையாக போராடும் என எதிர்பார்க்கலாம்.