November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எல்.பி.எல் தொடரில் முதல் வெற்றியை பெற்றது காலி

எல்.பி.எல் இருபது 20 கிரிக்கெட் தொடரில் காலி கிளாடியேட்டர்ஸ் அணி முதல் வெற்றியைப் பதிவுசெய்தது. கொழும்பு கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் காலி கிளாடியேட்டர்ஸ் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இது காலி கிளாடியேட்டர்ஸ் அணி இந்தத் தொடரில் விளையாடிய ஆறாவது போட்டி என்பதுடன், இன்னும் அவர்களுக்கு 2 போட்டிகள் மாத்திரமே எஞ்சியுள்ளன.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு கிங்ஸ் அணி 19 ஓட்டங்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது. லொவ்ரி இவென்ஸ் 7 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

டினேஸ் சந்திமால் 35 ஓட்டங்களைப் பெற்ற போதிலும் அணித்தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ், அஸான் பிரியஞ்சன், ஒன்ரே ரஸல் ஆகியோர் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேற கொழும்பு கிங்ஸ் அணி 13 ஓவர்களில் 105 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது.

என்றாலும், பெல் ட்ரம்மன்ட் 44 ஓட்டங்களையும், தக்சில டி சில்வா 27 ஓட்டங்களையும், இசுரு உதான 21 ஓட்டங்களையும் பெற்று அணியை வலுப்படுத்தினர். கொழும்பு கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 171 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

பந்துவீச்சில் மொஹமட் அமீர் 4 ஓவர்களில் 26 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளையும், லக்ஸான் சந்தகேன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

172 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய காலி கிளாடியேட்டர்ஸ் அணிக்கு ஆரம்பத் துடுப்பாட்ட ஜோடியான தனுஸ்க குணதிலக மற்றும் அசான் அலி ஜோடி சிறந்த ஆரம்பத்தைப் பெற்றுக்கொடுத்தது. இவர்கள் 10.3 ஓவர்களில் 97 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். தனுஸ்க குணதிலக 38 ஓட்டங்களுடனும், அசான் அலி 56 ஓட்டங்களையும் பெற்று வெளியேறினர்.

அடுத்து இணைந்த பானுக ராஜபக்ஸவும், அஸாம் கானும் காலி கிளாடியேட்டர்ஸ் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது. இவர்கள் வீழ்த்தப்படாத மூன்றாம் விக்கெட்டுக்காக 34 பந்துகளில் 68 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றியை உறுதிசெய்தனர்.

பானுக ராஜபக்ஸ ஒரு சிக்ஸர், 6 பௌண்டரிகளுடன் 37 ஓட்டங்களையும், அஸாம் கான் 16 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 3 பௌண்டரிகளுடன் 35 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொள்ள, காலி கிளாடியேட்டர்ஸ் அணி 17.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது.

காலி கிளாடியேட்டர்ஸ் அணி எதிர்வரும் 9 ஆம் திகதி தம்புள்ள வைகிங் அணியையும், 10 ஆம் திகதி கண்டி டஸ்கர்ஸ் அணியையும் எதிர்த்தாடவுள்ளது. அந்த 2 போட்டிகளிலும் வெற்றிபெற்றால் மாத்திரமே அரை இறுதிக்கு தகுதிபெற முடியும்.