July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி நியுஸிலாந்து அணி அபார வெற்றி

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 134 ஓட்டங்களால் நியுஸிலாந்து அணி அபார வெற்றியீட்டியது.

போட்டி 4 நாட்களுடன் முடிவுக்கு வந்ததுடன், நியுஸிலாந்து ஒரு இன்னிங்ஸில் மாத்திரமே துடுப்பெடுத்தாடி இந்த வெற்றியை ஈட்டியது.

ஹெமில்டனில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியுஸிலாந்து 7 விக்கெட் இழப்புக்கு 519 ஓட்டங்களைக் குவித்து இரண்டாம் நாளில் ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது.

அபாரமாகத் துடுப்பெடுத்தாடிய அணித்தலைவர் கேன் வில்லியம்ஸன் 251 ஓட்டங்களைக் குவித்தார். டொம் லதம் 86 ஓட்டங்களையும், கயல் ஜேமிஸன் 51 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் கெம ரொச், செனன் கெப்ரியல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இரண்டாம் நாள் மாலையில் முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த மேற்கிந்தியத் தீவுகள் அணி விக்கெட் இழப்பின்றி 49 ஓட்டங்களை அன்றைய ஆட்டநேர முடிவில் பெற்றிருந்தது.

எனினும் மூன்றாம் நாளில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் 10 விக்கெட்டுகளும் 89 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டன. அதன்படி மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முதல் இன்னிங்ஸ் 138 ஓட்டங்களுடன் நிறைவை எட்டியது.

டிம் சவுத்தி 4 விக்கெட்டுகளையும், கையில் ஜேமிஸன், நீல் வேன்கர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

அதன்படி இன்னிங்ஸ் தோல்வியைத் தடுக்க 381 ஓட்டங்களைப் பெறவேண்டிய கட்டாயத்துடன் மேற்கிந்தியத் தீவுகள் அணி பலோ ஒன்னில் இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பித்தது.

மீண்டும் முன்வரிசை வீரர்கள் துடுப்பாட்டத்தில் ஏமாற்றமளிக்க மேற்கிந்தியத் தீவுகள் அணி 89 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து மிகவும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டது.

ஆயினும் ஜேர்மைன் பிளெக்வூட் மற்றும் அலஸாரி ஜோசப் ஜோடி 7ஆம் விக்கெட்டுக்காக 155 ஓட்டங்களைப் பகிர்ந்து தோல்வியை சற்று தாமதிக்கச் செய்தது. அலஸாரி ஜோசப் 86 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க பிளெக்வூட் 104 ஓட்டங்களைப் பெற்றார்.

களத்தடுப்பின்போது உபாதைக்குள்ளான பின்வரிசை வீரரான டௌரிச்சினால் களமிறங்க முடியாமல் போக மேற்கிந்தியத் தீவுகள் அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் 4ஆம் நாளில் 247 ஓட்டங்களுடன் முடிவுக்கு வந்தது.

நீல் வேன்கர் 4 விக்கெட்டுகளையும், கையில் ஜேமிஸன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டனர்.