January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘நட்சத்திரங்கள் இன்றி கிடைத்த வெற்றி’

நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மாவும், ஜஸ்பிரிட் பும்ராவும் இன்றி கிடைத்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சியளிக்கின்றது என்று இந்திய கிரிக்கெட் அணித்தலைவரான விராத் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது சர்வதேச இருபது 20 போட்டியை வெற்றிகொண்ட பின்னர் அவர் இதனை கூறினார்.

போட்டியில் ஒட்டுமொத்த அணியாக சகலரும் ஒன்றிணைந்து விளையாடிய ஆட்டத்திற்கு கிடைத்த வெற்றி இதுவென்றும் இளம் வீரர்களின் வளர்ச்சி பெருமையளிக்கிறது என்றும் கோஹ்லி குறிப்பிட்டார்.

போட்டியில் கடைசி ஓவரில் இந்தியா வெற்றிபெற 14 ஓட்டங்கள் தேவைப்பட்டபோது அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய ஹார்திக் பாண்டியா 2 சிக்ஸர்களை விளாசி வெற்றியை உறுதிசெய்தார். இதனை நினைவுகூர்ந்த கோஹ்லி, 2016 ஆம் ஆண்டில் ஹார்திக் பாண்டியாவை சர்வதேச அணிக்கு கொண்டுவந்தமையை இட்டு பெருமை கொள்வதாகவும் கூறினார்.

இந்தப் போட்டியில் டிவிலியர்ஸ் போன்று ஸ்கூப் பாணியில் துடுப்பெடுத்தாடியமை தமக்கே ஆச்சரியமளிக்கிறது எனவும் அதனை டிவிலியர்ஸிடம் தெரிவித்து அவரது கருத்தைக் கேட்கவுள்ளதாகவும் விராத் கோஹ்லி மேலும் தெரிவித்தார்.