அவுஸ்திரேலிய மண்ணில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அடைந்த தோல்விகளால் எழுந்த விமர்சனங்களுக்கு இருபது 20 தொடரின் மூலம் இந்தியா முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இருபது20 தொடரை ஒருபோட்டி எஞ்சிய நிலையில் கைப்பற்றி தகுந்த பதிலடியையும் இந்தியா கொடுத்துள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது சர்வதேச இருபது20 போட்டியை இந்தியா அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிகொண்டு ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது.
சிட்னியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 194 ஓட்டங்களைப் பெற்றது.
மெதிவ் வேட் 58 ஓட்டங்களையும் ஸ்டீவன் ஸ்மித் 46 ஓட்டங்களையும் பெற்றனர்.
சிறப்பாக பந்துவீசிய நடராஜன் 4 ஓவர்களில் 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும், தாகூர், சஹால் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
195 ஓட்டங்களை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணிக்கு முன்வரிசை வீரர்கள் சிறந்த பங்களிப்புடன் வெற்றிக்கு அடித்தளமிட்டனர். லோகேஸ் ராகுல் 30 ஓட்டங்களையும் ஸிக்கர் தவான் 52 ஓட்டங்களையும் அணித்தலைவர் விராத் கோஹ்லி 40 ஓட்டங்களையும் பெற்றனர்.
இந்திய அணி 16.1 ஓவரில் 149 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அதற்கமைய இந்தியா வெற்றிபெற 23 பந்துகளில் 46 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அந்த இலக்கை ஹார்திக் பாண்டியா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி சிறப்பாகப் பகிர்ந்து வெற்றியை உறுதிசெய்தது.
ஹார்திக் பாண்டியா 42 ஓட்டங்களையும், ஸ்ரேயாஸ் ஐயர் 12 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றனர். இந்திய அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு வெற்றியை அடைந்தது.
இதன்படி 3 போட்டிகள் கொண்ட இந்த சர்வதேச இருபது20 தொடரில் 2-0 என இந்தியா முன்னிலையில் நீடிக்கிறது.