January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய- ஆஸி கிரிக்கெட்: 20-20 தொடரை பதிலடியுடன் ஆரம்பித்தது இந்தியா

(Photo:BCCI/Twitter)

அவுஸ்திரேலியாவிடம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அடைந்த தோல்விக்கான பதிலடியாக சர்வதேச இருபது 20 தொடரை இந்தியா வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.

முதல் போட்டியில் இந்திய அணி 11 ஓட்டங்களால் வெற்றிபெற்று முன்னிலை அடைந்துள்ளது.

கென்பராவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை இந்தியாவுக்கு வழங்கியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியின் முன்வரிசை துடுப்பாட்ட வீரர்களை அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேற்றினர்.

நட்சத்திர வீரர்களான ஸிகர் தவான், அணித்தலைவர் விராட் கோஹ்லி, மனிஸ் பாண்ட்டே, ஹர்திக் பாண்ட்யா ஆகியோரால் பிரகாசிக்க முடியவில்லை.

ஆனாலும், லோகேஸ் ராகுல் 51 ஓட்டங்களையும், பின்வரிசையில் ரவீந்ர ஜடேஜா 23 பந்துகளில் 44 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்று அணிக்கு நிம்மதி அளித்தனர்.

இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 161 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் ஹென்ரிக்ஸ் 3 விக்கெட்டுகளையும், மிச்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

வெற்றி இலக்கான 162 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய அவுஸ்திரேலியா சார்பாக அணித்தலைவர் ஏரோன் பிஞ்ச் மற்றும் ஸோர்ட் ஜோடி 7.4 ஓவர்களில் 56 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தைப் பெற்றுக்கொடுத்தது.

ஏரோன் பிஞ்ச் 35 ஓட்டங்களுடனும், ஸோர்ட் 34 ஓட்டங்களுடனும் வெளியேறினர்.  எனினும், அதன் பிறகு இந்திய பந்து வீச்சாளர்களின் கை மேலோங்கியது.

ஸ்டீவன் ஸ்மித், கிளென் மெக்ஸ்வெல், மெத்திவ் வேட் ஆகியோர் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க அடுத்த 50 ஓட்டங்களைப் பெறுவதற்குள் 5 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டன.

ஹென்ரிக்ஸ் 30 ஓட்டங்களைப் பெற்ற போதிலும் அது வெற்றிக்கு போதுமானதாக இல்லை. கடைசி ஓவரில் 24 ஓட்டங்கள் தேவைப்பட்ட போதிலும் அவுஸ்திரேலிய பின்வரிசை துடுப்பாட்ட வீரர்களால் 12 ஓட்டங்களையே பெற முடிந்தது.

20 ஓவர்களில் அவுஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்புக்கு 150 ஓட்டங்களைப் பெற்று 11 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. தமிழக வீரரான நடராஜன், யுஸ்வேந்திர சஹால் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இரண்டாவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டி சிட்னியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.