(Photo: Olivier giroud/Wikipedia)
பிரான்ஸ் கால்பந்தாட்ட வீரரும், “செல்சி கழக” அணிக்காக விளையாடுபவருமான ஒலிவர் ஜிரோட் ஒரே போட்டியில் 4 கோல்களைப் போட்டு அசத்தியுள்ளார்.
ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் கிண்ணக் கால்பந்தாட்டத் தொடரில் “செவில்லா கழக” அணிக்கு எதிரான போட்டியில் அவர் இந்த ஆற்றலை வெளிப்படுத்தினார்.
போட்டியில் 8 ஆவது நிமிடத்தில் செல்சி அணிக்கு முதல் கோலை ஒலிவர் ஜிரோட் பெற்றுக்கொடுத்தார். அதற்கமைய முதல் பாதியில் செல்சி அணி 1-0 என முன்னிலையில் இருந்தது.
இரண்டாம் பாதியிலும் தனி ஒருவராக ஒலிவர் ஜிரோட் பிரகாசித்தார். பந்து கிடைத்த சந்தர்ப்பங்களில் எல்லாம் கால்களால் வித்தைக் காட்டிய அவர் 54, 74 ஆவது நிமிடங்களில் கோலடித்து அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தினார்.
எதிரணி வீரர்களுக்கு தொடர்ந்தும் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த ஒலிவர் ஜிரோட் 83 ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பிலும் கோல் போட்டார்.
அதன்படி அணி சார்பில் பதிவான 4 கோல்களையும் தனி ஒருவராகப் போட்ட வீரர் என்ற சிறப்பை அவர் பெற்றார். செவில்லா கழக அணி வீரர்களால் இறுதிவரை கோல் போட முடியவில்லை. போட்டியை 4-0 எனும் கோல் கணக்கில் செல்சி அணி வெற்றிகொண்டது.
இந்த வெற்றியுடன் ஐரோப்பிய லீக் கிண்ணக் கால்பந்தாட்டத் தொடரில் செல்சி அணி சிறந்த 16 அணிகளின் சுற்றுக்கான வாய்ப்பையும் உறுதிசெய்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.