October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் அரை இறுதிக்கான வாய்ப்பு பிரகாசமானது

எல்.பி.எல் இருபது 20 கிரிக்கெட் தொடரில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் வெற்றிப் பயணம் தொடர்ந்த வண்ணமுள்ளது. காலி கிளாடியேட்டர்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் வெற்றியீட்டிய ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி அரை இறுதிக்கான தகுதியை நெருங்கியுள்ளது.

சஹிட் அப்ரிடி இல்லாத காரணத்தால் காலி கிளாடியேட்டர்ஸ் அணியை பானுக ராஜபக்ஸ வழிநடத்தினார். முதலில் துடுப்பெடுத்தாடிய காலி கிளாடியேட்டர்ஸ் அணி சார்பாக தனுஸ்க குணதிலக மற்றும் அசன் அலி ஜோடி 67 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டது.

அசன் அலி 29 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க அஸாம் கான் 25 ஓட்டங்களுடன் வெளியேறினார். சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய தனுஸ்க குணதிலக 56 ஓட்டங்களைப் பெற்றார்.
பின்வரிசையில் செட்விக் வோல்டன் 31 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுக்க காலி கிளாடியேட்டர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 170 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

வெற்றி இலக்கான 171 ஓட்டங்களை நோக்கி களமிறங்கிய ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் முதல் விக்கெட் 26 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டது. டொம் மூர்ஸ் 11 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
ஆனாலும் அவிஸ்க பெர்னாண்டோவும் மினோத் பானுகவும் இரண்டாம் விக்கெட்டுக்காக 62 பந்துகளில் 99 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றியீட்டும் நம்பிக்கையை உருவாக்கினர். மினோத் பானுக 40 ஓட்டங்களையும், அவிஸ்க பெர்னாண்டோ 59 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 7 பௌண்டரிகளுடன் 84 ஓட்டங்களையும் பெற்றனர்.

அணித்தலைவர் திசர பெரேரா, சொஹைப் மாலிக் ஆகியோர் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த போதிலும் அது அணிக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. வனிந்து ஹசரங்க 17 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுக்க ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை எட்டியது.
இந்த வெற்றியுடன் புள்ளிகள் பட்டியலில் 8 புள்ளிகளுடன் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி முதலிடத்தில் நீடிக்கிறது.