November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பதிலடி கொடுக்குமா இந்தியா?

அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்துள்ள இந்தியா சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 எனும் கணக்கில் இழந்த நிலையில் அடுத்ததாக சர்வதேச இருபது 20 தொடரை எதிர்கொள்ளத் தயாராகியுள்ளது. இதில் திறமையை வெளிப்படுத்தி தொடரையும் கைப்பற்றி அவுஸ்திரேலியாவுக்கு தக்க பதிலடியை இந்தியா கொடுக்குமா எனும் கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த கேள்விக்கு ஆம் எனும் பதிலை இந்திய வீரர்கள் வழங்குவதற்கான வாய்ப்பே அதிகமாக உள்ளது. ஏனெனில், மூன்றாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் இந்திய அணி வீரர்களின் செயற்பாடு அவ்வாறே அமைந்திருந்தது.

அத்துடன், அதிரடி ஆட்டக்காரரான டேவிட் வோனர் காயம் காரணமாக விலகியுள்ளமையும் அவுஸ்திரேலிய அணிக்கு சற்று பின்னடைவாகவே உள்ளது.

அவுஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரை ஸ்டீவன் ஸ்மித், கிளென் மெக்ஸ்வெல், ஏரோன் பிஞ்ச் ஆகியோர் பலம் பொருந்திய துடுப்பாட்ட வீரர்களாகத் திகழ்கின்றனர். இவர்களை கட்டுப்படுத்தினால் இந்திய அணியால் வெற்றியின் மீது நம்பிக்கை வைக்க முடியும்.

இந்திய அணியைப் பொறுத்தமட்டில் அணித்தலைவர் விராத் கோஹ்லி, லோகேஸ் ராகுல், மயன்க் அகர்வால், ஸிகர் தவான், ஹர்திக் பாண்ட்யா, ஸ்ரேயாஸ் ஐயர், ரவிந்ர ஜடேஜா என பலமான துடுப்பாட்ட வரிசை அமைந்துள்ளது.

பந்துவீச்சில் பிரகாசிக்கும் திறன் படைத்த ஜஸ்பிரிட் பும்ரா, மொஹமட் சமி, தீபக் சஹார், யுஸ்வேந்திர சகால், தமிழக வீரர்களான நடராஜன், வொஸிங்டன் சுந்தர் ஆகியோரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். இவர்களை ஒப்பிட்டுப் பார்த்தால் இந்திய அணியே சகலதுறையிலும் பலமான அணியாக தென்படுகின்றது.

எனவே, சர்வதேச ஒருநாள் தொடரில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வல்லமை படைத்த அணியே இந்தியா வசமுள்ளது. ஆனால், அவுஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது ஒன்றும் அவ்வளவு இலகுவான காரியமல்ல. இதனால் இரண்டு அணிகளின் ஆக்ரோஷமான ஆட்டத்தை விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி கண்டுகளிக்கலாம் என நம்பலாம்.