
நட்சத்திர கால்பந்தாட்ட வீரரான போர்த்துக்கல்லின் கிறிஸ்டியானோ ரொனால்டோ 750 ஆவது கோலைப் போட்டு உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் கிண்ணக் கால்பந்தாட்டத் தொடரில் ஜுவான்டஸ் கழக அணிக்காக விளையாடும் அவர் டைனமோ கழக அணிக்கு எதிரான போட்டியில் அந்தக் கோலைப் போட்டார்.
போட்டியில் முதல் பாதியில் ஜுவான்டஸ் கழக அணி 1-0 எனும் கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. 21 ஆவது நிமிடத்தில் அணி வீரரான சீஸா அந்த கோலைப் போட்டார்.
இரண்டாம் பாதியில் மீண்டும் திறமையாக விளையாடிய ஜுவான்டஸ் அணி வீரர்கள் மேலும் 2 கோல்களைப் போட்டனர். கிறிஸ்டியானோ ரொனால்டோ 57 ஆவது நிமிடத்திலும், மொராட்டா 66 ஆவது நிமிடத்திலும் கோலடித்தனர்.
எதிராளியான டைனமோ கழக அணி வீரர்கள் கோலடிக்க எவ்வளவோ முயற்சித்த போதிலும் அது கைகூடவில்லை. இறுதியில் 3-0 எனும் கோல் கணக்கில் ஜுவான்டஸ் கழக அணி வெற்றிவாகைசூடியது.
கிறிஸ்டியானோ ரொனால்டோ கழக மட்டத்தில் ஜுவான்டஸ் சார்பாக 75 கோல்களையும், ரியால் மெட்ரிட்டுக்காக 450 கோல்களையும், மென்செஸ்டர் யுனைடட்டுக்காக 118 கோல்களையும், லிஸ்பன் அணிக்காக 5 கோல்களையும் போட்டுள்ளார். போர்த்துக்கல் சார்பாக 102 கோல்களைப் போட்டுள்ள அவர் கால்பந்தாட்ட அரங்கில் தனது 750 ஆவது கோலைப் பதிவுசெய்தார்.