அவுஸ்திரேலியாவுக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 13 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
எவ்வாறாயினும், முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்ற அவுஸ்திரேலியா தொடரை 2-1 எனும் ஆட்டக் கணக்கில் கைப்பற்றியது.
சிட்னியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்தியா சார்பாக தமிழக வீரரான ரி.நடராஜனுக்கு சர்வதேச ஒருநாள் அறிமுகம் கிடைத்தது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி ஆரம்பம் முதலே ஓட்டங்களைப் பெறுவதில் சிரமத்துக்குள்ளானது.
ஸிகர் தவான், சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், லோகேஸ் ராகுல் ஆகியோர் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த போதிலும் அணித்தலைவர் விராத் கோலி 63 ஓட்டங்களைப் பெற்று அணியை வலுப்படுத்தினார்.
விராத் கோலி உலக சாதனை
விராத் கோலி சர்வதேச ஒருநாள் அரங்கில் குறைந்த இன்னிங்ஸ்களில் 12 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்த வீரராக உலக சாதனை படைத்தார். இதற்கு முன்னர் இந்த சாதனை பட்டியலில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் வசமிருந்தது.
சச்சின் டெண்டுல்கர் 300 இன்னிங்ஸ்களில் 12 ஆயிரம் ஓட்டங்களைக் குவித்ததுடன், அந்த உலக சாதனையை முறியடித்துள்ள விராத் கோலி அதற்காக 242 சர்வதேச ஒருநாள் இன்னிங்ஸ்களை எடுத்துக்கொண்டுள்ளார்.
பாண்ட்யா – ஜடேஜா ஜோடி இணைப்பாட்ட சாதனை
ஒரு கட்டத்தில் இந்திய அணி 32 ஓவர்களில் 152 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது. ஆனாலும், அடுத்து இணைந்த ஹர்திக் பாண்ட்யா மற்றும் ரவீந்ர ஜடேஜா ஜோடி வீழ்த்தப்படாத ஆறாம் விக்கெட்டுக்காக 108 பந்துகளில் 150 ஓட்டங்களைப் பகிர்ந்தது.
இதன் மூலம் ஆறாம் விக்கெட்டுக்காக அல்லது பின்வரிசையில் அவுஸ்திரேலிய மண்ணில் அதிக ஓட்டங்களைப் பகிர்ந்த ஜோடியாகவும் இவர்கள் பதிவானார்கள். ஹர்திக் பாண்ட்யா ஒரு சிக்ஸர், 7 பௌண்டரிகளுடன் 92 ஓட்டங்களையும், ரவிந்ர ஜடேஜா 3 சிக்ஸர்கள், 5 பௌண்டரிகளுடன் 66 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றனர்.
இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 302 ஓட்டங்களைக் குவித்தது.
பந்துவீச்சில் அஸ்டன் அகார் 2 விக்கெட்டுகளையும், ஜொஸ் ஹசல்வூட்,அபொட், ஆடம் ஸம்பா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
சர்வதேச கிரிக்கெட்டில் நடராஜனுக்கு முதல் விக்கெட்
வெற்றி இலக்கான 303 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய அவுஸ்திரேலிய அணியின் முதல் விக்கெட்டை அறிமுக வீரரான நடராஜன் வீழ்த்தினார். மானஸ் லபுசேன் 7 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததுடன் அவரே நடராஜனின் முதல் விக்கெட் ஆனார்.
அதிரடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான டேவிட் வோனர் இல்லாத குறையை நன்கு உணர முடிந்தது. அவுஸ்திரேலிய அணியின் முன்வரிசை துடுப்பாட்டம் சோபை இழந்தது. அணித்தலைவர் ஏரோன் பிஞ்ச் 75 ஓட்டங்களைப் பெற்ற போதிலும் அவருக்கு எவருமே சிறந்த ஒத்துழைப்பு கொடுக்கவில்லை.
தொடர்ச்சியாக இரண்டு சதங்களை விளாசிய ஸ்மித்தினால் இன்று 7 ஓட்டங்களுக்கு மேல் பெற முடியவில்லை. பின்வரிசையில் கிளென் மெக்ஸ்வெல் 4 சிக்ஸர்கள், 3 பௌண்டரிகளுடன் 59 ஓட்டங்களைப் பெற்ற போதிலும் அது வெற்றிக்கு போதவில்லை.
இறுதி நேரத்தில் அபாரமாகப் பந்துவீசிய நடராஜன் மற்றொரு விக்கெட்டை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு பங்களிப்பு வழங்கினார். அவுஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் 289 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.
பந்துவீச்சில் தாகூர் 3 விக்கெட்டுகளையும், ஜஸ்பிரிட் பும்ரா, நடராஜன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். போட்டியின் சிறப்பாட்டக்காரர் விருதை ஹர்திக் பாண்ட்யாவும், தொடரின் சிறந்த வீரர் விருதை ஸ்டீவன் ஸ்மித்தும் வென்றனர்.