January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எல்பிஎல்: “கொழும்பு கிங்ஸ்” அணிக்கு முதல் தோல்வி

எல்பிஎல் இருபது 20 கிரிக்கெட் தொடரில் கொழும்பு கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தம்புள்ள வைகிங் அணி 28 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

எல்பிஎல் தொடரில் அவர்கள் பெற்ற இரண்டாவது வெற்றி என்பதுடன் கொழும்பு கிங்ஸ்  அணிக்கு முதல் தோல்வியாகும்.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ள வைகிங் அணியின் முதலிரண்டு விக்கெட்டுகளும் 3 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டன.

நிரோஸன் திக்வெல்ல, போல் ஸ்ரேலிங் ஆகியோர் தலா ஓர் ஓட்டத்துடன் ஆட்டமிழந்தனர்.  என்றாலும், உபுல் தரங்க 25 ஓட்டங்களையும், சமித் பட்டேல் 30 ஓட்டங்களையும் பெற்று ஆறுதல் அளித்தனர்.

சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய தசுன் சானக 34 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 3 பௌண்டரிகளுடன் 56 ஓட்டங்களைப் பெற்றார்.

ஏஞ்சலோ பெரேரா 21 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுக்க தம்புள்ள வைகிங் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 175 ஓட்டங்களைப் பெற்றது.

இசுரு உதான, ஆன்ரே ரஸல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், தஸ்மந்த சமீர 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

176 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய கொழும்பு கிங்ஸ் அணி முதல் பந்திலேயே முதல் விக்கெட்டை பறிகொடுத்தது.

டினேஸ் சந்திமால் ஆட்டமிழந்தார். அணித்தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ், ஆன்ரே ரஸல், அஸான் பிரியஞ்சன் போன்ற நட்சத்திர வீரர்களும் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து பெரும் ஏமாற்றமளித்தனர்.

தனி ஒருவராகப் போராடிய லொவ்ரி இவன்ஸ் 33 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 5 பௌண்டரிகளுடன் 59 ஓட்டங்களைப் பெற்றார்.  ஆனாலும், ஏனைய வீரர்கள் எவரும் அவருக்கு ஒத்துழைப்பு வழங்காததால் அது வெற்றிக்கு போதுமானதாக இல்லை.

கொழும்பு கிங்ஸ் அணி 18.4 ஓவர்களில் 147 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழக்க தம்புள்ள வைகிங் அணி 28 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இது தம்புள்ள அணியின் இரண்டாவது வெற்றி என்பதுடன் அவர்கள் 4 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் உள்ளனர்.