தென் ஆபிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியிலும் இங்கிலாந்து அணிக்கே வெற்றி கிட்டியது.
இதற்கமைய 3 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என இங்கிலாந்து முழுமையாகக் கைப்பற்றியது. மூன்றாவதும், இறுதியுமான போட்டி கேப் டவுனில் நடைபெற்றது.
போட்டியில் முதலில் தென் ஆபிரிக்கா அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 191 ஓட்டங்களைக் குவித்தது.
தென் ஆபிரிக்கா 9.3 ஓவர்களில் 64 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த போதிலும் பெப் டு பிலெசி மற்றும் வென்டர் டசன் ஜோடி, வீழ்த்தப்படாத நான்காம் விக்கெட்டுக்காக 63 பந்துகளில் 128 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை வலுப்படுத்தியது.
பெப் டு பிலெசி 37 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 5 பௌண்டரிகளுடன் 52 வென்டர் டசன் 32 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 5 பௌண்டரிகளுடன் 74 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றனர். பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டுகளையும், கிறிஸ் ஜோடான் ஓரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
கடின இலக்கான 192 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய இங்கிலாந்து அணி 25 ஓட்டங்களுக்கு முதல் விக்கெட்டை இழந்து சற்று பின்னடைவுக்குள்ளானது. ஜேசன் ரோய் 16 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
ஆனாலும், அபாரமாகத் துடுப்பெடுத்தாடிய ஜோஸ் பட்லர் – டாவிட் மாலன் ஜோடி அதிரடியாக 167 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றியை உறுதிசெய்தது. அதற்காக இவர்கள் வெறும் 84 பந்துகளையே எடுத்துக்கொண்டனர்.
அதிரடியில் மிரட்டிய டாவிட் மாலன் 47 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 11 பௌண்டரிகளுடன் 99 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் விளாசினார்.
அவருக்கு சிறந்த ஒத்துழைப்பு வழங்கிய ஜோஸ் பட்லர் 5 சிக்ஸர்கள், 3 பௌண்டரிகளுடன் 67 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றார்.
இங்கிலாந்து அணி 17.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு வெற்றியை அடைந்தது. கடைசி போட்டியின் சிறப்பாட்டக்காரர், தொடரின் சிறந்த வீரர் ஆகிய இரண்டு விருதுகளையும் டாவிட் மாலன் தன்வசப்படுத்திக் கொண்டார்.