July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எல்பிஎல் கிரிக்கெட்: வெற்றி நடைபோடும் ‘ஜப்னா ஸ்டாலியன்ஸ்’

எல்.பி.எல் இருபது 20 கிரிக்கெட் தொடரில் “ஜப்னா ஸ்டாலியன்ஸ்” அணியின் வெற்றிப் பயணம் தொடர்ந்த வண்ணமுள்ளது.

கண்டி டஸ்கர்ஸ் அணியை வீழ்த்திய ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி தொடர்ச்சியாக தனது மூன்றாவது மூன்றாவது வெற்றியை தனதாக்கியது.

கண்டி டஸ்கர்ஸ் மற்றும் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணிகள் இடையிலான போட்டி ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்‌ஷ சர்வதேச மைதானத்தில்  நடைபெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் தலைவர் திசர பெரேரா முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை பெற்றுக் கொண்டார்.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி ஆரம்பத்தில் சற்று சிரமத்துக்குள்ளாகி 9.3 ஓவர்களில் 49 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது.

அவிஸ்க பெர்னாண்டோ, மினோத் பானுக, டொம் மூர்ஸ், சொஹைப் மாலிக் ஆகியோர் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

ஆனாலும், அணித்தலைவர் திசர பெரேராவும், தனஞ்சய டி சில்வாவும் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி அதிரடியாக ஓட்டங்களைக் குவித்தனர். இவர்கள் நான்காம் விக்கெட்டுக்காக 47 பந்துகளில் 118 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

திசர பெரேரா 28 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 5 பௌண்டரிகளுடன் 68 ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா 38 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 5 பௌண்டரிகளுடன் 61 ஓட்டங்களையும் பெற்றனர்.

ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 185 ஓட்டங்களைக் குவித்தது. நவின் உல் சுக் 3 விக்கெட்டுகளையும், அசேல குணரத்ன 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

(Photo: kandy tuskers/Facebook)

வெற்றி இலக்கான 186 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய கண்டி டஸ்கர்ஸ் அணி வீரர்களால் எதிர்பார்த்தளவு சோபிக்க முடியவில்லை. அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டன.

ரஹ்மதுல்லா கப்பாஸ், குசல் ஜனித் பெரேரா, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ் என அடுத்தடுத்து வந்த வீரர்களும் சொற்ப ஓட்டங்களுடன் வந்த வேகத்திலேயே அரங்கம் திரும்பினர்.

பிரென்டன் டெய்லர் 46 ஓட்டங்களையும், அசேல குணரத்ன 31 ஓட்டங்களையும் பெற்று ஆறுதல் கொடுத்தனர்.

அணியின் ஏழு வீரர்கள் 10இற்கும் குறைவான ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். கண்டி டஸ்கர்ஸ் அணியால் 17.1 ஓவரில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 131 ஓட்டங்களையே பெற முடிந்தது.

அதன்படி 54 ஓட்டங்களால் வெற்றிபெற்ற ஜப்னா ஸ்டலியன்ஸ் மூன்றாவது வெற்றியைப் பதிவுசெய்தது. புள்ளிகள் பட்டியலில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி 6 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.