February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கண்டிக்கு முதல் வெற்றி : காலிக்கு மூன்றாவது தோல்வி

photo/Kandy Tuskers/facebook

எல்.பி.எல் இருபது20 கிரிக்கெட் தொடரில் கண்டி டஸ்கர்ஸ் அணி தனது முதல் வெற்றியைப் பதிவுசெய்தது.

தனது மூன்றாவது போட்டியில் காலி கிலெடியேடர்ஸ் அணியை எதிர்கொண்ட கண்டி டஸ்கர்ஸ் அணி 25 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

திங்கட்கிழமை இரவு மின்னொளியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கண்டி டஸ்கர்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 196 ஓட்டங்களைப் பெற்றது.

குசல் மென்டிஸ் 49 ஓட்டங்களையும், பிரென்டன் டெய்லர் ஆட்டமிக்காமல் 51 ஓட்டங்களையும் பெற்றனர்.

லக்சான் சந்தகேன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பதிலளித்தாடிய காலி கிலெடியேடர்ஸ் அணி சார்பாக ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான தனுஸ்க குணதில அதிரடியாக அரைச்சதமடித்து வெற்றிமீது நம்பிக்கை அளித்தார்.

53 பந்துகளை எதிர்கொண்ட அவர் ஒரு சிக்ஸர், 13 பௌண்டரிகளுடன் 82 ஓட்டங்களைப் பெற்றார்.

எனினும் பானுக ராஜபக்ஸ, மிலிந்த சிறிவர்தன ஆகியோர் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க,வெற்றியின் எதிர்பார்ப்பு கேள்விக்குறியானது.

அணித்தலைவர் சஹிட் அப்ரிடி தாம் சந்தித்த முதல் பந்திலேயே ஓட்டமின்றி ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

ஸெஹான் ஜயசூரிய 17 ஓட்டங்களையும்,மொஹமட் அமிர் 15 ஓட்டங்களையும் பெற்று வெற்றிக்கு முயற்சித்த போதிலும் அது போதுமானதாக இல்லை.

இறுதியில் காலி கிலெடியேடர்ஸ் அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 171 ஓட்டங்களையே பெற முடிந்தது.

முனாப் பட்டேல், தில்ருவன் பெரேரா, அசேல குணரத்ன, சீகுகே பிரசன்ன, நவீன் உல் சுக் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தி வெற்றியை இலகுவாக்கினர்.

கண்டி டஸ்கர்ஸ் அணிக்கு இது மூன்றாவது போட்டி என்பதுடன் முதல் வெற்றியாகும்.

காலி கிலெடியேடர்ஸ் அணி தொடர்ச்சியாக மூன்றாவது போட்டியிலும் தோல்வியடைந்ததுடன் அரை இறுதி வாய்ப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.