November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இரண்டாவது போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது அவுஸ்திரேலியா

pic:cricket.com.au

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் ஆதிக்கம் செலுத்திய அவுஸ்திரேலிய அணி, 51 ஓட்டங்களால் வெற்றிபெற்று ஒரு போட்டி எஞ்சிய நிலையில் ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது.

சிட்னியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா தரப்பில் டேவிட் வோனர் – அணித்தலைவர் ஏரோன் பிஞ்ச் ஜோடி 22.5 ஓவர்களில் 142 ஓட்டங்களைப் பகிர்ந்தது. ஏரோன் பிஞ்ச் 60 ஓட்டங்களையும், டேவிட் வோனர் 83 ஓட்டங்களையும் பெற்றனர்.

ஸ்டீவன் ஸ்மித் – மானஸ் லபுசேன் ஜோடி 97 பந்துகளில் 136 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை வலுப்படுத்தியது. மானஸ் லபுசேன் 70 ஓட்டங்களுடன் வெளியேற ஸ்டீவன் ஸ்மித் அதிரடியாக சதமடித்தார். 64 பந்துகளில் அவர் 2 சிக்ஸர்கள், 14 பௌண்டரிகளுடன் 104 ஓட்டங்களைக் குவித்தார். இது இந்தத் தொடரில் அவர் பெற்ற இரண்டாவது சதமாகும்.

கிளென் மெக்ஸ்வெல் 29 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 4 பௌண்டரிகளுடன் 63 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற, அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 389 ஓட்டங்களைக் குவித்தது.

390 ஓட்டங்களைப் பெற வேண்டிய கட்டாயத்தில் பதிலளித்தாடிய இந்திய அணியின் முதலிரண்டு விக்கெட்டுகளும் 60 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டன. ஸிகர் தவான் 30 ஓட்டங்களுடனும், மயன்க் அகர்வால் 28 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

விராத் கோஹ்லி – ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி மூன்றாம் விக்கெட்டுக்காக 97 ஓட்டங்களைப் பகிர்ந்து நம்பிக்கை அளித்தது. ஸ்ரேயாஸ் ஐயர் 38 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது ஹென்ரிக்ஸின் அபார பிடியெடுப்பில் ஆட்டமிழந்தார்.

விராத் கோஹ்லி 89 ஓட்டங்களுடனும், லோகேஸ் ராகுல் 76 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க இந்திய அணியின் வெற்றி கேள்விக்குறியானது. ஹர்திக் பாண்ட்யா, ரவிந்ர ஜடேஜா ஆகியோராலும் பெரிய அளவில் ஆற்றல்களை வெளிப்படுத்த முடியவில்லை.

இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 338 ஓட்டங்களைப் பெற்று தோல்வியடைந்தது.அவுஸ்திரேலியா அணி சார்பில் பெட் கமின்ஸ் 3 விக்கெட்டுகளையும், ஜொஸ் ஹஸல்வூட், அடம் ஸம்பா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.