ஸ்பெயினின் லா லீகா கால்பந்தாட்ட தொடரில் ஒசசுனா கழக அணிக்கு எதிரான போட்டியில் பார்ஸிலோனா கழக அணி 4-0 எனும் கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியை மறைந்த கால்பந்தாட்ட ஜாம்பவான் டியாகோ மரடோனாவுக்கு சமர்ப்பணம் செய்வதாக நட்சத்திர வீரரான லியோனல் மெஸி தெரிவித்துள்ளார்.
போட்டியை ஆக்ரோஷமாக ஆரம்பித்த பார்ஸிலோனா கழக அணி முதல் பாதியில் 2 கோல்களைப் போட்டது. 29 ஆவது நிமிடத்தில் பிரத் வைட்டும், 42 ஆவது நிமிடத்தில் கிரிஸ்மனும் கோலடித்தனர். முதல் பாதியில் ஒசசுனா அணியால் கோலடிக்க முடியாமல் போக 2-0 எனும் கோல் கணக்கில் பார்ஸிலோனா கழக அணி முன்னிலை வகித்தது.
இரண்டாம் பாதியில் மீண்டும் திறமையை வெளிப்படுத்திய பார்ஸிலோனா அணி மேலும் 2 கோல்களை அடித்தது. 57ஆவது நிமிடத்தில் கவுடின் ஹோ கோலடித்தார். தொடர்ந்து 73ஆவது நிமிடத்தில் லியோனல் மெஸி கோலொன்றைப் போட்டார்.
ஒசசுனா கழக அணி வீரர்களால் இறுதிவரை கோல் போட முடியவில்லை.
A moment for eternity. pic.twitter.com/nZt2LLfg1r
— FC Barcelona (@FCBarcelona) November 29, 2020
போட்டியில் 4-0 எனும் கோல் கணக்கில் பார்ஸிலோனா கழக அணி வெற்றிவாகை சூடியது. இது லாலீகா கால்பந்தாட்டத் தொடரில் இந்த பருவகாலத்தில் பார்ஸிலோனா அணி பெற்ற நான்காவது வெற்றியாகும்.
9 போட்டிகளில் 4 வெற்றிகளை பெற்றுள்ள பார்ஸிலோனா கழக அணி 14 புள்ளிகளுடன் எட்டாம் இடத்தில் உள்ளது. இந்த பட்டியலி ல் ரியால் சொஸியடேட் கழக அணி 7 வெற்றிகளுடன் 23 புள்ளிகளைப் பெற்று முதலிடம் வகிப்பதும் குறிப்பிடத்தக்கது.