எல்.பி.எல் இருபது 20 கிரிக்கெட் தொடரில் சனிக்கிழமை நடைபெற்ற இரண்டாவது போட்டி மழைக் காரணமாக பல மணித்தியாலங்கள் தடைப்பட்டு பின்னர் 5 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டு நடத்தப்பட்டது.
இரவு 8 மணிக்கு ஆரம்பமாக வேண்டிய போட்டி 10 மணிக்கு பின்னரே ஆரம்பமானது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு கிங்ஸ் அணி 5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 96 ஓட்டங்களைப் பெற்றது.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான அன்ட்ரே ரஸல் 19 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 9 பௌண்டரிகளுடன் 65 ஓட்டங்களையும், லூவிஸ் இவன்ஸ் 21 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றார்.
பதிலளித்தாடிய காலி கியேடியேட்டர்ஸ் அணியால் 5 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 62 ஓட்டங்களையே பெற்றுக்கொள்ள முடிந்தது.
தனுஷ்க குணதிலக்க 30 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்ற போதிலும், அணித்தலைவர் சஹிட் அப்ரிடி 12 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
டக்வேர்த் லுவிஸ் விதிமுறையில் கொழும்பு கிங்ஸ் அணி 34 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. இது கொழும்பு கிங்ஸ் அணியின் இரண்டாவது வெற்றி என்பதுடன் அவர்கள் 4 புள்ளிகளுடன் முதலிடத்தை வகிக்கிறார்கள்.
இதேநேரம், கொழும்பு கிங்ஸ் அணிக்கு கிடைத்த இந்த வெற்றி அவர்களுக்கு எல்பிஎல் தொடரில் கிடைத்த இரண்டாவது தொடர் வெற்றியாகும்.