January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கண்டி டஸ்கர்ஸ் அணியின் வெற்றியை பறித்தெடுத்த மழை

எல்பிஎல் இருபது 20 தொடரில் கண்டி டஸ்கர்ஸ் அணி தனது இரண்டாவது போட்டியில் துரதிர்ஷ்டவசமாக தோல்வியடைந்தது. மழை காரணமாக போட்டி தடைப்பட்டதால் வெற்றி டக்வேர்த் லூவிஸ் விதிமுறையில் தம்புள்ளை வைகிங்ஸ் அணி வசமானது.

ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற முதல் போட்டியில் தம்புள்ளை வைகிங்ஸ் மற்றும் கண்டி டஸ்கர்ஸ் அணிகள் விளையாடின. முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ளை வைகிங்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 195 ஓட்டங்களைப் பெற்றது.

அணித்தலைவர் தசுன் ஷானக 37 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 8 பௌண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 73 ஓட்டங்களையும், சமித் பட்டேல் 58 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் அசேல குணரத்ன, நவின் உல் ஹக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

196 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய கண்டி டஸ்கர்ஸ் அணி 9.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 84 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது, போட்டி மழை காரணமாக தடைப்பட்டது. அதன் பிறகு போட்டியை ஆரம்பிக்க முடியவில்லை.

இதனால் வெற்றி டக்வேர்த் லூவிஸ் விதிமுறையில் தீர்மானிக்கப்பட்டதுடன், அதற்கமைய அந்தத் தருணத்தில் கண்டி டஸ்கர்ஸ் அணி 89 ஓட்டங்களைப் பெற்றிருந்தாலே வெற்றிபெற முடியும் என கணிக்கப்பட்டது.

எனினும் அந்த அணி அப்போது 84 ஓட்டங்களைப் பெற்றிருந்ததால் தம்புள்ளை வைகிங்ஸ் அணி 4 ஓட்டங்களால் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.