July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எல்பிஎல்: காலி அணியுடன் மோதுகிறது யாழ்ப்பாண அணி!

எல்பிஎல் இருபது 20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் மற்றும் காலி கிளாடியேட்டர்ஸ் அணிகள் அடுத்து மோதவுள்ளன.

ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணிக்கு சகலதுறை வீரரான திசர பெரேரா தலைமை தாங்குகிறார். காலி கிளேடியேட்டர்ஸ் அணிக்கு சஹிட் அப்ரிடி தலைவராக அறிவிக்கப்பட்டிருந்தார்.

எனினும், சஹிட் அப்ரிடி இந்த ஆட்டத்தில் இடம்பெறுவாரா மாட்டாரா என்பது குறித்து உறுதியாகத் தெரியவில்லை.

சஹிட் அப்ரிடி தாமதமாக இலங்கைக்கு வருகை தந்ததால் அவர் பெரும்பாலும் முதலிரண்டு ஆட்டங்களில் பங்கேற்கமாட்டார் என்றே முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் உபதலைவரான பானுக ராஜபக்ஷ அணித்தலைவர் பொறுப்பை வகிப்பார் என்றும் கூறப்பட்டது.

பாகிஸ்தானின் நட்சத்திர வீரர்களான சப்ராஸ் அஹமட், மொஹமட் அமீர் ஆகியோர் மாத்திரமே காலி கிளேடியேட்டர்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள பெயர் குறிப்பிடும்படியான வெளிநாட்டு வீரர்கள்.

அகில தனஞ்ஜய, அசித பெர்னாண்டோ, தனுஸ்க குணதிலக, ஸெஹான் ஜயசூரிய, லக்ஸான் சந்தகேன், மிலிந்த சிறிவர்தன, நுவன் துசார போன்ற சர்வதேச மட்டத்தில் அனுபவமிக்க வீரர்களும் அங்கம் வகிக்கின்றனர்.

ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியைப் பொறுத்தவரை வட மாகாணத்தின் நான்கு வீரர்கள் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் களமிறங்கியுள்ளனர். செபஸ்தியன்பிள்ளை விஜயராஜ், தெய்வேந்திரம் டினோஷன், கனகரத்தினம் கபில்ராஜ், விஜயகாந்த் வியாஸ்காந்த் ஆகிய நால்வரிலும் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

இவர்களில் லசித் மாலிங்கவின் பாணியில் பந்துவீசும் திறமை கொண்ட விஜயராஜ் இலங்கை தேசிய அணி வீரர்களுடன் சர்வதேச மைதான வலைப் பயிற்சிகளில் பந்துவீசிய அனுபவமுள்ளவர்.

அவருக்கு இந்த ஆட்டத்தில் இல்லாவிட்டாலும், இத்தொடரில் ஒரு ஆட்டத்திலேனும் வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சொய்ப் மாலிக், கயில் அபொட், உஸ்மான் ஷின்வாரி ,டுவான் ஒலிவர்,ஜொன்சன் சார்ல்ஸ், டொம் மூர்ஸ் போன்ற வெளிநாட்டு வீரர்கள் ஜப்னா ஸ்டாலியன் அணி வீரர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

சரித் அஸலங்க, மினோத் பானுக, தனஞ்ஜய டி சில்வா, சதுரங்க டி சில்வா, வணிந்து ஹஸரங்க, பினுர பெர்னாண்டோ, நுவனிந்து பெர்னாண்டோ, அவிஷ்க பெர்னாண்டோ, பிரபாத் ஜயசூரிய, மகேஷ் தீக்‌ஷன,சுரங்க லக்மால் போன்ற தேசிய மட்ட இலங்கை வீரர்களும் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இரண்டு அணிகளிலும் புதுமுக வீரர்கள் இடம்பெற வாய்ப்புள்ளதால் இந்த ஆட்டம் சவால் மிக்கதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டி இரவு 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.