January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எல்.பி.எல் முதல் போட்டி; சூப்பர் ஓவரில் கண்டியை வீழ்த்தியது கொழும்பு

எல்.பி.எல் இருபது20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் ஹம்பாந்தோட்டையே அதிரும் வண்ணம் இலங்கை வீரர்கள் துடுப்பெடுத்தாடி ரசிகர்களை மகிழ்வித்தனர். இரண்டு அணிகளும் தலா 219 ஓட்டங்களைக் குவித்து சுப்பர் ஓவருக்கு தள்ளப்பட்ட இந்தப் போட்டியில் மிகுந்த போராட்டத்தின் பின்பு கொழும்பு கிங்ஸ் அணி வெற்றியீட்டியது.

போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற கொழும்பு கிங்ஸ் அணித்தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் களத்தடுப்பை தெரிவுசெய்தார். அதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய கண்டி டஸ்கர்ஸ் அணி சார்பாக ரஹமுல்லா கப்பாஸ் மற்றும் குசல் ஜனித் பெரேரா ஜோடி முதல் விக்கெட்டுக்காக 5.4 ஓவர்களில் 75 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

ரஹமுல்லா கப்பாஸ் 22 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 6 பௌண்டரிகளுடன் 53 ஓட்டங்களை விளாசினார். மூன்றாம் இலக்க வீரரான குசல் மென்டிஸ் 30 ஓட்டங்களைப் பெற்றார்.
குசல் ஜனித் பெரேராவும், அசேல குணரத்னவும் மூன்றாம் விக்கெட்டுக்காக 39 பநதுகளில் 73 ஓட்டங்களை அதிரடியாகப் பகிர்ந்தனர். குசல் ஜனித் பெரேரா 52 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 9 பௌண்டரிகளுடன் 87 ஓட்டங்களைக் குவித்தார்.

அசேல குணரத்ன 5 பௌண்டரிகளுடன் 33 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற கண்டி டஸ்கர்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 219 ஓட்டங்களைக் குவித்தது.

மிகப்பெரிய ஓட்ட எண்ணிக்கையான 220 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய கொழும்பு கிங்ஸ் அணியும் சளைக்காமல் பதிலடிகொடுத்தது. முன்வரிசை விக்கெட்டுகள் விரைவாக வீழ்த்தப்பட்டாலும் போட்டி இறுதிவரை விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி நீடித்தது.

தனி ஒருவராகப் பிரகாசித்த டினேஸ் சந்திமால் 46 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 12 பௌண்டரிகளுடன் 80 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டும் நம்பிக்கையை உருவாக்கினார்.

பின்வரிசையில் அதிரடி காட்டிய இசுரு உதான 12 பந்துகளில் 4 சிக்ஸர்களுடன் 34 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்று போட்டியை சமநிலைக்கு கொண்டு சென்றார். கடைசி ஓவரில் 20 ஓட்டங்கள் தேவைப்பட்ட போது அவர் 19 ஓட்டங்களை விளாசி ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தார்.

கொழும்பு கிங்ஸ் அணியும் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 219 ஓட்டங்களைப் பெற்றுக்கொள்ள போட்டி சமநிலையுடன் முடிந்தது.

இதனையடுத்து வெற்றியை தீர்மானிக்க சுப்பர் ஓவர் வீசப்பட்டது. அதில் விதிமுறைப்படி முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு கிங்ஸ் அணி 16 ஓட்டங்களைப் பெற்றது. பதிலளித்தாடிய கண்டி டஸ்கர்ஸ் அணியால் 12 ஓட்டங்களையே பெற முடிந்தது. அதன்படி கொழும்பு கிங்ஸ் அணி எல்.பி.எல் தொடரை வெற்றியுடன் ஆரம்பித்தது.