கண்டி அணி பயிற்சி (pic: Lanka Premier League / Facebook))
இலங்கையில் கொரோனா அச்சம் காரணமாக சில இடங்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில் எல்பிஎல் இருபது20 கிரிக்கெட் தொடர் ஹம்பாந்தோட்டை சூரியவெவ மைதானத்தை மையமாகக்கொண்டு இன்று வியாழக்கிழமை ஆரம்பமாகின்றது.
கொரோனா பரவும் அபாயம் இருப்பதால் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் ஹம்பாந்தோட்டையில் சிறப்பு பாதுகாப்பு வலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பார்வையாளர்கள் எவரும் மைதானத்துக்கு செல்ல அனுமதியில்லை எனவும் ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இந்தப் போட்டிகளை தொலைக்காட்சியில் நேரடியாகக் காணமுடியும் என்பதால் இலங்கை கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பு சற்று மேலோங்கியே உள்ளது.
தொடரில் கொழும்பு கிங்ஸ் அணி, கண்டி டஸ்கர்ஸ், கோல் கிளேடியட்டர்ஸ், ஜப்னா ஸ்டாலியன்ஸ், தம்புள்ள வைகிங் ஆகிய 5 அணிகள் விளையாடுகின்றன.
லீக் சுற்றில் ஓர் அணி எதிரணியை 2 தடவைகள் சந்திக்கவுள்ளதுடன் லீக் சுற்றின் முடிவில் முதல் நான்கு இடங்களை வகிக்கும் அணிகள் அரை இறுதிகளில் மோதவுள்ளன.
அதிலிருந்து இறுதிப் போட்டிக்கான அணி தெரிவாகி டிசம்பர் 16 ஆம் திகதி இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.
கொழும்பு கிங்ஸ் அணிக்கு ஏஞ்சலோ மெத்யூஸும் கண்டி டஸ்கர்ஸ் அணிக்கு குசல் ஜனித் பெரேராவும் தலைவர் பொறுப்பை வகிக்கின்றனர்.
இரண்டு அணிகளினதும் இறுதி 11 வீரர்கள் யாரென்பது உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை.
ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபடும் பந்தய முகவர்களை கருத்திற்கொண்டு வீரர்களின் தகவல்களும், போட்டிக்கான தயார்நிலைகள் உள்ளிட்ட விடயங்களும் மிகவும் இரகசியமாகப் பேணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் கடந்த ஜனவரி மாதத்துக்கு பின்னர் நடத்தப்படும் முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச மட்ட விளையாட்டுப் போட்டியாக இத்தொடர் அமைந்துள்ளது.
கடந்த ஓராண்டுக்கு மேலாக இலங்கை கிரிக்கெட் வீரர்கள் சொந்த மண்ணில் போட்டிகளில் பங்கேற்கவில்லை.
இதனால் இலங்கை வீரர்களின் ஆட்டத்தை காண்பதற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
போட்டி இலங்கை நேரப்படி இரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது.