13 ஆவது ஐபிஎல் இருபது 20 கிரிக்கெட் தொடரில் இந்திய கிரிக்கெட் சபைக்கு இந்திய மதிப்பில் 4000 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் தொடர்ந்து நிலவிய கொரோனா அச்சம் காரணமாக ஐ.பி.எல் இருபது 20 தொடரை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்துவதற்கு இந்திய கிரிக்கெட் சபை தீர்மானித்தது.
வழமையாக ஏப்ரல், மே மாதங்களில் நடத்தப்படும் இந்தத் தொடர் இந்தமுறை ஒக்டோபர், நவம்பரில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. காலநிலையும் சீராக இருந்ததால் அனைத்து போட்டிகளும் தங்குதடையின்றி நடைபெற்றன.
போட்டிகளை பார்வையிட ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படாத போதிலும் தொலைக்காட்சி ஊடாக பெரும் எண்ணிக்கையிலானோர் போட்டிகளை கண்டுகளித்தனர். இதனால் தொலைக்காட்சி விளம்பரங்கள் தேவைக்கும் அதிகமாகவே கிடைத்திருந்தன.
இந்நிலையில் 13ஆவது ஐ.பி.எல் போட்டிகளின் மூலம் 4000 கோடி ரூபாவை இந்திய கிரிக்கெட் சபை வருமானமாக ஈட்டியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தளவு வருமானம் இந்தியாவில் நடந்திருந்தால் கூட கிடைத்திருக்குமா? என்பதும் சந்தேகமே.