லங்கா பிரிமியர் லீக் இருபது 20 கிரிக்கெட் தொடரை எந்தத் தடை வந்தாலும் தயங்காமல் நடத்தி முடிப்போம் என போட்டி ஏற்பாட்டுக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 27 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை சூரியவெவ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
எல்பிஎல் அங்குரார்ப்பண நிகழ்வு 26 ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
எவ்வாறாயினும், தொடரில் பங்கேற்கவிருந்த பாகிஸ்தானின் சொஹைல் தன்வீர் மற்றும் கனடாவின் ரவீந்தர் போல் சிங் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே, முக்கிய வீரர்களான லசித் மாலிங்க, கிறிஸ் கெய்ல் மற்றும் இங்கிலாந்தின் ரவி பொப்பரா ஆகியோர் இந்த தொடரிலிருந்து விலகிக்கொண்டுள்ளனர்.
அத்துடன், கொழும்பு கிங்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த கபீர் அலி கொரோனா தொற்றுக்கு உள்ளானதைத் தொடர்ந்து, அந்த இடத்துக்கு தென் ஆபிரிக்காவின் ஹேர்ஷல் கிப்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
தென் ஆபிரிக்காவின் பெப் டு பிளெஸியும் இங்கிலாந்து தொடருக்கு கவனம் செலுத்த வேண்டியுள்ளதால், எல்பிஎல் தொடரிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்துள்ளார்.
எல்பிஎல் அணிகளில் இடம்பெற்றுள்ள வெளிநாட்டு வீரர்கள் சிலரும் தனிமைப்படுத்தலில் இருக்கின்றனர். இவ்வாறாக பல தடைகளும் எல்பிஎல் போட்டிகளுக்கு ஏற்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், தடைகளால் துவண்டு போகாமல், இந்தத் தொடரை திட்டமிட்டபடி நடத்துவதற்கு சகல ஏற்பாடுகளையும் பூர்த்திசெய்துள்ளதாக எல்பிஎல் போட்டி ஏற்பாட்டுக் குழு தெரிவிக்கின்றது.