January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“அமெரிக்க – சீன மோதலால் கொழும்பு துறைமுக நகரமும் “நெருக்கடியில்”!

சீனாவின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்கா தொடர்ச்சியாக கட்டுப்பாடுகளை விதித்து வருகின்ற நிலையில், அதன் உச்சகட்ட நடவடிக்கையாக சீன நிறுவனங்களும் சர்வதேச ரீதியில் சிக்கலை எதிர்கொண்டு வருகின்றன.

சீனாவின் 24 முக்கிய நிறுவனங்களுக்கு அமெரிக்கா அண்மையில் தடை விதித்துள்ளது. இலங்கையில் Colombo Port City எனப்படும் கொழும்பு சர்வதேச நிதி நகரத்தை நிர்மாணித்து வருகின்ற முக்கிய சீன நிறுவனமொன்றும் இதில் அடங்குகிறது.

கொழும்பு துறைமுக நகரை நிர்மாணித்துவரும் சைனா ஹாபர் இன்ஜினியரிங் கொம்பனி (China Harbour Engineering Company) நிறுவனத்தின் தலைமை நிறுவனமான சைனா கொமியுனிகேஸஷன் கொன்ஸ்ட்ரக்ஷன் கொம்பனியையும் (China Communications Construction Company- CCCC) அமெரிக்காவின் இந்தத்தடை பாதித்துள்ளது.

அமெரிக்காவின் இந்த நகர்விற்கு இலங்கையிலுள்ள சீனத்தூதரகம் கடுமையான கண்டனத்தை பதிவுசெய்துள்ளது. இந்த நிறுவனமே ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் மத்தள ராஜபக்ஷ விமானநிலையம் ஆகியவற்றையும் நிர்மாணித்திருந்தது.

“மூன்றாவது நாடொன்றால் மேற்கொள்ளப்பட்ட ஒரு தலைப்பட்சமான, நியாயமற்ற நடவடிக்கையின் காரணமாக இறைமையுள்ள நாடுகளான சீனாவினதும் இலங்கையினதும் அனுமதி பெற்ற நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களது வழமையான வர்த்தக உறவு பாதிக்கப்படும்” என்று கொழும்பு சீனத் தூதரகத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் லூவோ சொங் தெரிவித்துள்ளார்.