உலகத்தை இயக்கும் வல்லமை கொண்ட சக்தியை அதி தேவதையாக போற்றும் நவராத்திரி விரதம் இன்று ஆரம்பமாகிறது.
புரட்டாதி வளர்பிறை பிரதமை திதியில் இன்று ஒக்டோபர் 3 ஆம் திகதி ஆரம்பமாகியுள்ள நவராத்திரி விரதம் 9 நாட்களின் பின்னர் 12 ஆம் திகதியன்று விஜயதசமியுடன் நிறைவு பெறவுள்ளது.
சிவனுக்கு ஒரு ராத்திரி சிவராத்திரி, சக்திக்கு 9 ராத்திரிகள் நவராத்திரி ஆகும். சக்திக்கு பல விரதங்கள் இருந்தாலும் நவராத்திரி விரதம் முக்கியத்துவம் பெறுகிறது.
நவம் என்றால் ஒன்பது. ஒன்பது இரவுகள் கொண்டாடப்படுவதால் நவராத்திரி என்னும் பெயர் பெறுகிறது.
நவராத்திரி நான்கு வகைப்படும்: வசந்த நவராத்திரி, ஆஷாட நவராத்திரி, சாரதா நவராத்திரி, சியாமளா நவராத்திரி.
சித்திரை மாதத்தில் வரும் வசந்த நவராத்திரியும் புரட்டாதி மாதத்தில் சாரதா நவராத்திரியும் முக்கியமானதாக கருதப்படுகின்றன.
இவ்விரு காலங்களும் எமனுடைய கோரப்பற்களுக்கு சமனாகக் கருதப்படுகிறது. பருவ காலங்கள் மாறும் போது நோய்நொடிகள் பரவும்.இந்த ஆபத்தில் இருந்து மக்களை காப்பாற்ற முன்னோர்கள் இவ்விழாவை நடத்தினர்.
தேவி மகாத்மியம்
சித்திரை நவராத்திரி காலப்போக்கில் மறைந்து புரட்டாதி நவராத்திரி மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.
இந்த நவராத்திரி வழிபாடு ஏன் தோன்றியது என “தேவி மகாத்மியம்” என்னும் நூல் அழகாகக் கூறுகிறது.
முன்னொரு காலத்தில் சும்பன், நிசும்பன் எனும் இரு அசுரர்கள் தேவர்களிடம் வரம் பெற்று தங்களை யாராலும் அழிக்க முடியாது என்று ஆணவம் கொண்டார்கள்.
மக்களை துன்புறுத்தினார்கள், தவசீலர்களின் வேள்விகளை செய்ய விடாமல் அழித்தார்கள். மக்கள் அஞ்சி நடுங்கினார்கள்.
இரு அசுரர்களும் ஆண்கள் யாராலும் அழிக்க முடியாது, பெண்ணால்தான் தங்களின் மரணம் நிகழ வேண்டும் என்ற வரங்களை வாங்கிக் கொண்டார்கள்.
தேவர்கள் பூமியில் நடக்கும் செயலைக் கண்டு கவலை அடைந்தார்கள். மகா விஷ்ணுவிடம் முறையிட்டார்கள். மகா விஷ்ணு சிவனிடம் அழைத்துச் சென்று நடந்தவற்றைக் கூறினார்.
அவர்கள் பிரம்மாவையும் அழைத்து என்ன செய்வது என்று யோசித்தார்கள். அன்னை ஆதி சக்தியால் தான் முடியும் என நினைத்து மும்மூர்த்திகளும் தேவர்களும் ஆதி சக்தியை நோக்கி பிரார்த்தித்தார்கள்.
ஆதி சக்தியும் மக்கள் படும் துன்பங்களை கண்டு இரங்கினாள். அழகான பெண் உருவம் கொண்டு பூமிக்கு புறப்பட்டாள். பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் தங்கள் சக்திகள் எல்லாவற்றையும் ஒன்று திரட்டி அன்னைக்கு அளித்துவிட்டு சிலையாக நின்றனர்.
இந்திரனும் அட்டதிக்குப் பாலகர்களும் தங்கள் ஆயுதங்களை அளித்துவிட்டு சிலையாக நின்றார்கள். அவர்கள் பொம்மை போல நின்றதால் தான் பொம்மை கொலு வைக்கும் வழக்கம் வந்ததாகவும் கூறப்படுகின்றது.
அன்னை தேவர்களின் ஆயுதங்களையும் பத்துக் கரங்களில் தாங்கி போர்க்கோலம் பூண்டு பூமிக்கு வந்தாள். சும்ப, நிசும்பர்களையும் அவர்களது படைத் தளபதிகளான மது, கைடபன், ரக்த பீஜன் ஆகியோரை அழித்து தர்மத்தை நிலைநாட்டினாள்.
அவள் வெற்றி பெற்ற தினமே விஜயதசமி ஆகும். ஒன்பது நாளும் போர் செய்து பத்தாம் நாள் தசமியன்று வெற்றி பெற்றதால் விஜயதசமி எனும் பெயர் பெற்றது.
இந்த ஒன்பது நாட்களில் முப்பெரும் சக்திகளாக அன்னை மாறினாள்.
முதல் மூன்று நாட்களும் துர்க்கையாக மாறினாள். துர்க்கையாக வீரத்தால் ஆணவத்தை அழித்து வெற்றி கொண்டாள்.
அடுத்த மூன்று நாட்கள் வறுமையை செல்வத்தினால் வெற்றிகொள்ள இலக்குமியாக உருவெடுத்தாள்.
இறுதி மூன்று நாட்கள் அறியாமையை ஞானத்தால் வெற்றிகொள்ள சரஸ்வதியாக உருவெடுத்தாள்.
இந்த ஒன்பது நாட்களும் துர்க்கை, இலக்குமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியர்க்கும் விரதம் இருந்து அவர்களின் அருள் பெற வேண்டும்.
மகா நவமி
நவராத்திரியின் ஒன்பதாம் நாள் நவமி ஆகும். இது மகா நவமி என அழைக்கப்படும். மகா நவமி இரவு எல்லா சைவ இல்லங்களிலும் சரஸ்வதி பூசை செய்து வழிபடுவர்.
இதை ஆயுதபூஜை எனவும் அழைப்பர். சுவாமி அறையில் சரஸ்வதி தேவியின் திருவுருவத்தின் முன் மாணவர்கள் பாட புத்தகங்களை வைத்து கடலை, வடை, அவல், கரும்பு,பழம், கற்கண்டு போன்ற பிரசாதங்களை படைத்து தூபதீபம் காட்டி தோத்திரம் பாடி வழிபடுவார்கள்.
நவராத்திரி காலத்தில் குமரகுருபரர் அருளிய சகலகலாவல்லி மாலை பாடல் பாடப்படும். இது கலைமகளுக்கு ஏற்ற பாடலாகும்.
இந்த ஆயுதபூஜையில் இசைக் கலைஞர்கள் தங்கள் இசைக் கருவிகளை வைத்து வழிபடுவர். தொழில் செய்பவர்கள் தங்கள் ஆயுதங்களை வைத்து வழிபடுவதும் அதை இறைபொருளாக பாவித்து வணங்குவதே ஆயுதபூஜையின் சிறப்பம்சமாகும்.
விஜயதசமி
நவராத்திரியின் பத்தாம் நாள் தசமி. விஜயதசமி என சொல்வார்கள். அன்று பாடசாலைகள், பள்ளிக்கூடங்களில் சரஸ்வதி பூசை சிறப்பாக நடைபெறும். மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெறும். அன்று பாடசாலைகளிலும், ஆலயங்களிலும் வித்யாரம்பம் நடைபெறும்.
குழந்தைகளுக்கு முதல் எழுத்து ஆரம்பிப்பதை ஏடு தொடக்குதல் என்றும் சொல்வர். விஜய என்றால் வெற்றி அதனால் இந்நாள் வெற்றிக்குரிய நாளாக கருதப்படுகிறது.
இதனால் விஜயதசமி என்று கூறப்படுகின்றது. இந்நாளில் கலைகள் ஆரம்பிப்பது புதிய தொழில் ஆரம்பித்தல் என்பவற்றை செய்தால் வெற்றி கிட்டும் என்பது நம்பிக்கை.
கன்னி வாழை வெட்டல்
விஜயதசமி தினத்தன்று மாலை ஆலயங்களில் கன்னி வாழை வெட்டல் அல்லது மானம்புத் திருவிழா நடக்கும். அன்று அம்பாளுக்கு விசேட பூசைகள் நடைபெறும். அம்பிகையை அலங்கரித்து வீதி வலம் கொண்டு வந்து மகிஷாசுரவதம் நிகழ்த்தப்படும்.
ஒரு வன்னி மரத்தை நட்டு அதை அசுரனாக பாவித்து அந்த மரத்தை வெட்டி துண்டிக்கும் பாவனை காட்டப்படும். வன்னி மரம் இல்லாத இடத்தில் வாழை மரத்தை நட்டு அதை வெட்டி மகிஷாசுரனை வதம் செய்வதாகக் காட்டப்படும்.
மகிஷாசுரனை வதம் செய்ததால் அம்பிகை மகிஷாசுரவர்த்தினி என்ற பெயரையும் பெற்றாள்.
இந்த மகிஷாசுர வதம் சகல ஆன்மாக்களும் ஆணவ மலத்திலிருந்து விடுபட்டு சுகம் அடைவதைக் காட்டப்படுகிறது.
எனவே அனைவரும் எம்மில் இருக்கும் ஆணவத்தைப் போக்கி அன்பும் கருணையும் உள்ளவர்களாக இறை பக்தியுடன் வாழ்வதை நவராத்திரி விரதம் எடுத்துக் காட்டுகிறது.
வையத்துள் வாழ்கின்ற மக்கள் அனைவரும் நோயற்ற வாழ்வு வாழ்ந்து நலம் பெற வேண்டும் என அம்பிகையை பிரார்த்திப்போமாக….
மலைமகள் அலைமகள் கலைமகள்
அருள் அனைவருக்கும் கிடைப்பதாக
அம்பிகையைச் சரண் புகுந்தால்
அதிக வரம் பெறலாம்.
(படங்கள்: நன்றி – கொழும்பு மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில்)