November 21, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வல்லிபுர ஆழ்வார் திருவிழா

ஈழத் திருநாட்டின் வடக்கே யாழ். மாவட்டத்தில் பருத்தித்துறையில் வடமறவர் ஆட்சி புரிந்த வல்லிபுரப் பதியில் அமர்ந்து அருளாட்சி புரிகின்றான் வங்கக்கடல் கடைந்த மாயவன்.

பருத்தித்துறையிலிருந்து 4 மைல் தொலைவில் துன்னாலை, புலோலி, வராத்துப்பளை, கற்கோவளம் ஆகிய கிராமங்களுக்கு மத்தியில் எழில் மிகுந்து அருள் பொழிந்து நிற்கும் வரலாற்றுப் பெருமை பெற்ற வைணவ ஆலயம் வல்லிபுர ஆழ்வார் கோவில்.

கடலலைகள் துள்ளி எழுந்து தாலாட்ட, கரையினிலே வெண்மணல் பரப்பி நிற்க, மரங்கள் பரந்து சோலைகளாய் காத்து நிற்க திருமாலின் திருக்கரங்களில் திகழும் சுதர்சனச் சக்கரம் வல்லிபுரத்தில் வந்தமர்ந்து அரசாளும் திருக்காட்சி அற்புதமானது.

மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்றும் ஒருங்கே அமையப்பெற்ற விஷ்ணு தலம் வல்லிபுர ஆழ்வார் கோவில்.

மூர்த்தி
ஆலயங்களில் பொதுவாகக் கருவறையில் சுவாமியின் விக்கிரகம் அமைந்திருப்பதுதான் வழக்கம். சில ஆலயங்களின் கருவறையில் சுவாமியின் ஆயுதங்களை வைத்திருப்பார்கள்.

இங்கு விஷ்ணுவின் ஆயுதமாகிய சுதர்சனச்சக்கரம் கருவறையில் வைத்து பூசிக்கப்படுகிறது.

தலம்
தொன்மைமிக்க வைணவ ஆலயமாக திகழந்தாலும் சிவ-வைஷ்ணவ ஐக்கியத்தை வெளிப்படுத்தும் தலமாக இந்த ஆலயம் விளங்குகிறது.

விபூதியும் திருமண்ணும் (நாமம்) பிரசாதமாக வழங்கப்படுகிறது. இங்கு பூசப்படும் திருமண் குடத்தனை என்ற கிராமத்தில் இருந்து கொண்டுவரப்படுவது தலத்தின் சிறப்பாகும்.

தீர்த்தம்
இவ்வாலயத் திருவிழாவின் 16ஆம் நாள் ஆலயத்தின் கிழக்கே உள்ள சமுத்திரத்தில் தீர்த்தம் இடம்பெறும். இது கடலாடு தீர்த்தம் என்றும் சொல்லப்படும்.

17ஆம் நாள் ஆலயத்தில் உள்ள கேணியில் நடைபெறும் தீர்த்தம் கேணித்தீர்த்தம் என்று சொல்லப்படுகிறது.

காரணப் பெயர்
இவ்விடத்திற்கு வல்லிபுரம் என்ற பெயர் ஏற்படுவதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. கி.பி. 303 இல் நாகர்களின் ஆட்சியும் 556 இல் லம்பகர்ணன் ஆட்சியும் முடிவுக்கு
வர, இப்பகுதியில் படைவீரர்களான வடமறவர்கள் ஆட்சி செய்த படியால் இந்த இடம் வடமராட்சி என்று பெயர் பெற்றதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

நூலாசிரியர் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளயின் கருத்துப்படி, தொண்டை நாட்டின் வடக்கில் வசித்த மக்களில் ஒரு பகுதியினர் இங்கு குடியேறியதால் அப்பிரதேசத்திற்கு வடமராட்சி என பெயர் வந்ததாக தெரியவருகிறது.

அக்குழுவின் தலைவனாக இருந்த வல்லியத்தேவனின் பெயரைக் குறிக்கும் முகமாக வல்லிபுரம் என்றும் பெயரிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

வல்லி என்ற சொல்லுக்கு ஆயர்பாடி என்றும் புரம் என்றால் கோவில் என்றும் பொருள் வருவதால் வல்லிபுரம் ஆயர்பாடி கோவிலாகவும் கொள்ளப்படுகிறது. இவ்விதம் வல்லிபுரம் என்ற பெயர் வர பல காரணங்கள் உள்ளன.

பொற்சாசனம்
வல்லிபுர ஆழ்வார் கோவிலுக்குரிய நிலத்தில் பழைய கட்டடத்தின் அழிபாடுகளுக்கிடையில் 1936 ஆம் ஆண்டளவில் வல்லிபுரம் பொன்னேட்டுச்சாசனம் கண்டெடுக்கப்பட்டது.

4 வரிகள் கொண்ட சாசனம் பிராமி எழுத்தில் எழுதப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடப்படும் பியகுக என்னும் இடம் தற்காலத்திலுள்ள புங்குடுதீவுடன் அடையாளப்படுத்தப்படுகிறது.

எனவே வல்லிபுர பிரதேசமும் ஆழ்வார் கோவிலும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாகவ கருதப்படுகிறது.

ஐதீகக்கதை
தட்சண கைலாய மான்மியம் எனும் நூலின்படி ஆழ்வார் கோவிலின் ஐதீக வரலாறு அற்புதமானது.

தற்போது இக் கோவில் தீர்த்த உற்சவம் நடைபெறும் வங்கக் கடல் பகுதியிலே அதிசயமான மச்சமொன்று துள்ளிக்குதித்து, ஆரவாரம் செய்து மக்களை அதிசயத்தில் ஆழ்த்தியது.

கற்கோவள கடலோடிகள் அந்த மச்சத்தைப் பிடிப்பதற்கு எடுத்த முயற்சிகள் கை கூட வில்லை. இவ்வேளையில் வராத்துப் பளையைச் சேர்ந்த நாகசாபம் பெற்ற மீனவப் பெண்ணான வல்லி நாச்சி பயபக்தியுடன் தவமிருந்தார்.

அவர் கனவில் தோன்றிய பகவான் சிலவற்றைக் கூறி மறு நாள் குறித்த இடத்திற்கு வருமாறு பணித்தார். மறு நாள் காலை அங்கு கப்பலில் உட்கார்ந்து பகவானின் திருநாமங்களை உச்சரித்தார்.

அப்போது அந்த மச்சம் கடலில் இருந்து அவர் மடியில் துள்ளிக் குதித்து அழகிய குழந்தையாக மாறியது. கண்ணன் உதித்தான் என ஆரவாரம் செய்த வலைஞர்கள் குழந்தையை பல்லக்கில் வைத்து தூக்கிச் சென்றனர்.

களைப்புற்ற மக்கள் ஓர் இடத்தில் பல்லக்கை வைத்து இளைப்பாறினர். பின்னர் பல்லக்கைத் தூக்க முயற்சி செய்தபோது பல்லக்கு மாயமாக மறைந்தது.

சக்கரம் ஒன்று தோன்றியது. எனவே அம்மக்கள் அவ்விடத்தில் ஆலயம் ஒன்றை அமைத்து அச்சக்கரத்தை வழிபடத் தொடங்கினார்கள். இக்கதை ஐதீகக் கதை இன்று வரை செவி வழியாகப் பேணப்பட்டு வருகிறது.

ஆலய அமைப்பு
ஆலயத்தின் நான்கு திசைகளிலும் நான்கு வாயில்கள் அமைந்துள்ளன. ஆலயத்திற்கு செல்லும் பொழுது முதலில் தெரிவது கோபுரமாகும்.

இதற்கு தூல லிங்கம் என்றும் பெயர் உண்டு. கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று சொல்வார்கள். முதலில் கோபுரத்தை தரிசித்த பின்பே உட்செல்லுதல் வேண்டும்.

இவ்வாலயத்தின் இராஜகோபுரம் 71 அடி உயரமும் 7 தளங்களையும் கொண்டு வானுயர்ந்து பக்தியை வெளிப்படுத்துகிறது.

திருமாலின் திருவிளையாடல்களை குறிக்கும் சிற்பங்கள், அருட்செயல்கள், திருமாளின் அவதாரங்கள், இன்கும் பல பக்தியுணர்வு சொட்டும் கலையம்சம் பொருந்திய சிற்பங்களும் கோபுரத்திற்கு மெருகூட்டி நிற்கின்றன. இவை இந்திய சிற்பக்கலைஞர்களினால் வடிவமைக்கப்பட்டவை.

பரிவார மூர்த்திகள்
தென்மேற்கில் விநாயகர் ஆலயம் உள்ளது. பூமாதேவி, ஸ்ரீதேவி, மகாவிஷ்ணு, நவக்கிரகங்கள், நாச்சியார், நாகதம்பிரான், சப்தகன்னியர், ஆஞ்சநேயர் போன்ற தெய்வங்களும் வைக்கப்பட்டுள்ளன.

பிள்ளையார் வழிபாடு
வைணவ ஆலயங்களிலும் அக்காலங்களில் விநாயகருக்கே முதலிடம் கொடுக்கப்பட்டது. இதனால் ஆலமரம், அழகிய குளம், நெல்வயல்கள் நிறைந்த இயற்கை அன்னையின் அரவணைப்பில் உள்ள குருக்கட்டு சித்தி விநாயகருக்கு பூசை செய்த பின்னர் தான் வல்லிபுர ஆழ்வாருக்கு பூசை நடைபெறுகிறது.

பூசை, திருவிழாக்கள்
இவ்வாலயத்தில் தினமும் ஆறுகாலப் பூசைகள் நடைபெற்று வருகின்றன. ஞாயிற்றுக்கிழமைகள் பெருமாளுக்கு விசேட நாளாக கருதப்படுகின்றது. மாதந்தோறும் வரும் ஏகாதசி சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.

கிருஷ்ண ஜெயந்தியும், வைகுண்ட ஏகாதசியும் சிறப்பாக நடைபெறுகின்றன. தீபாவளி அன்று நரகாசுர சம்ஹாரம் நடைபெறும்.

மகோற்வம்
ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதத்தில் அமாவாசையன்று வல்லிபுர ஆழ்வாருக்கு மகோற்சவம் ஆரம்பமாகி 17 நாட்கள் நடைபெறுகின்றன.

திருவிழாவின் 9ஆம் நாள் வெண்ணெய்த்திருவிழா, 11ஆம் நாள் பாம்புத்திருவிழா, 12ஆம் நாள் கம்சன் திருவிழா,14 ஆம் நாள் சப்பறத் திருவிழா, 15ஆம் நாள் தேர்த்திருவிழா, 16ம், 17ம் நாட்களில் தீர்த்தத் திருவிழாக்கள் என்பன சிறப்பான திருவிழாக்களாகும்.

நூல்கள்,பிரபந்தங்கள்
இவ்வாலயத்தின் தொன்மையான வரலாற்றை தட்சிண கைலாய புராணம், யாழ்ப்பாண வைபவ மாலை என்பன கூறுகின்றன.

வல்லிபுரத் திருவந்தாதி, குருக்கட்டுத் திருவந்தாதி, கருடன் தூது, மும்மணிமாலை, வல்லிப்புரநாதர் பதிகம், சிங்கை நகர்ப்பதிகம் போன்ற பிரபந்தங்களை பல புலவர்களும் பாடியுள்ளனர்.

இக்கோவிலுக்கு அர்ச்சகர்கள் பரம்பரை பரம்பரையாக பூசை செய்து வருகிறார்கள். எல்லா இடங்களிலும் வாழ்கின்ற மக்கள் இங்கு வந்து வல்லிபுர ஆழ்வாரை தரிசித்து செல்வது ஆலயத்தின் சிறப்பையும் பக்தியையும் வெளிப்படுத்துகிறது.

இவ்வருட மகோற்சவம்
16.09.2020 கொடியேற்றம்
30/09/2020 தேர்த்திருவிழா
01/10/2020 சமுத்திரத்தீர்த்தம்
02/10/2020 கேணித்தீர்த்தம்


(படங்கள்: நன்றி- ஶ்ரீ வல்லிபுர ஆழ்வார் சிவாமி கோவில் தொண்டர் சபை)
-தமிழ்வாணி (பிரான்ஸ்)