
மூலம்: மெக்சிகோ குவாடலூப்பே “The wonder of Guadalupe”
By: Francis Johnston பிரசாந்தி (திருகோணமலை)
“கோடிப் புதுமை செய்யும் தெய்வக்
கோதை குவாடலூப்பே
பாடிப் போற்றும் எம்மை நீர்
பாராதிருப்பதேனோ…”
இலங்கையின் கிழக்கு மாகாணம், திருகோணமலையில் பதி கொண்டிருக்கும் புனித குவாடலூப்பே அன்னையின் வருடாந்த திருவிழா தற்போது நடைபெற்று வருகின்றது.
கடந்த 18ம் திகதி செப்டெம்பர் 2020- வெள்ளிக்கிழமை பங்குத் தந்தை ஜெயபாலன் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழாவின் விசேட நவநாள் திருப்பலிகள் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றன.திருகோணமலை நகரின் பிரதான வீதிகளினூடாக இன்று நடைபெற்ற அன்னையின் திருச்சொரூப பவனியில் பக்தர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.

பத்தாம் நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை மறைமாவட்ட ஆயர் கிறிஸ்டியன் நோயல் இம்மானுவேல் ஆண்டகை தலைமையில் இறுதிநாள் சிறப்புத் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்படும்.
ஆலய வரலாறு
திருகோணமலையில் சின்னக்கடைப் பங்கில் வியாகுல மாதா ஆலயம் ஒன்று அமையப் பெற்றிருந்தது. நாளடைவில் பக்தர்கள் தொகை அதிகரித்ததனால் பங்குத்தந்தை ஜோன் பீட்டர் அடிகளார், புதிய ஆலயம் ஒன்றை அமைப்பதற்கு அப்பொழுது ஆயராக இருந்த ஆயர் இக்னேசியஷ் கிளனி ஆண்டகையின் உதவியை நாடினார்.
ஆயருக்கு அமெரிக்காவிலிருந்து பொருளுதவி வழங்கிய பக்தர்கள், இலத்தீன் அமெரிக்கா எங்கும் பாதுகாவல் தெய்வமாக விளங்கும் மெக்சிகோவின் பிரசித்தி பெற்ற குவாடலூப்பே மாதாவின் பெயரில் புதிய ஆலயத்தை ஸ்தாபிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
அந்தக் கோரிக்கையை ஏற்று 1956 ஆம் ஆண்டு திருகோணமலையில் குவாடலூப்பே மாதா ஆலயம் ஸ்தாபிக்கப்பட்டது.

குவாடலூப்பே மாதாவின் அற்புத வரலாறு
மெக்சிகோ நகரில் குவாடலூப்பே எனும் இடத்தில் உள்ள திபேயாக் மலைக் குன்றில் 1531 ஆம் ஆண்டு டிசம்பர் 9ம் திகதி செவ்விந்திய இனத்தவரான யுவான் தியாகோ எனும் ஏழை விவசாயிக்கு மரியன்னை காட்சி கொடுக்கிறார்.

காட்சி அளித்த இறை அன்னை அவ்விடத்தில் தமக்கு ஒரு ஆலயம் கட்டுமாறு பணிக்கிறார்.
ஆனால் பாமரனான யுவான் தியாகோ தன்னை விட சமூகத்தில் மதிக்கத்தக்க ஒருவரை மெக்சிகோ ஆயரிடம் அனுப்புமாறு அன்னையிடம் வேண்டிக் கொள்கிறார்.
எனினும் தயங்கியபடியே மரியன்னையின் வேண்டுதலை ஆயரிடம் தெரிவிக்கிறார் யுவான்.
யுவானை நம்ப மறுத்த ஆயர், ஆதாரமாக அன்னையிடம் இருந்து அருள் அடையாளம் ஒன்றை பெற்று வருமாறு பணிக்கிறார்.

கடும் குளிர் காலத்தில் அதிசயமாக திபேயாக் குன்றில் ரோஜா மலர்களை பூக்கச் செய்த அன்னை, யுவானிடம் அந்த மலர்களை பறித்து அவரது மேல் போர்வையில் சேகரித்து கொண்டு செல்லுமாறு ஆயரிடம் அனுப்புகிறார்.
கொண்டுவந்துள்ள அதிசய மலர்களை காண்பிப்பதற்காக யுவான் தனது போர்வையை விரித்தபோது, அந்தப் போர்வையில் அன்னையின் உருவம் தத்ரூபமாக பதிந்திருக்கின்றது.
நடந்ததைப் பார்த்து யுவான் திகைத்து நின்ற போது ஆயர் கண்ணீர் மல்க அன்னையின் உருவத்தைப் பார்த்து வணங்குகிறார்.

உடனடியாக குவாடலூப்பே- திபேயாக் குன்றில் ஆலயத்தைக் கட்டுகிறார் ஆயர். யுவானின் போர்வையில் பதியப்பட்ட அன்னையின் உருவம் அந்த ஆலயத்தில் ஸ்தாபகம் செய்யப்பட்டது.
அன்று முதல் மெக்சிகோவிலுள்ள குவாடலூப்பே அன்னையை தரிசிக்க இலட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை செய்து வருகின்றனர்.

அன்னையின் திருவுருவம் பதிந்த மேற்போர்வை 489 ஆண்டுகளாக ஆலயத்தில் பேணப்பட்டு வருகின்றது.
யுவானுக்கு அன்னை காட்சி கொடுத்த நாளாகிய டிசம்பர் 12-ம் திகதியே பல்லாயிரக்கணக்கான மக்களின் பிரசன்னத்தோடு மெக்சிகோவில் திருவிழா நடந்து வருகின்றது.
அன்னைக்கு திருகோணமலையில் ஆலயம் எழுந்த நாளை மையப்படுத்தி ஒவ்வொரு ஆண்டும் செப்டெம்பர் மாதம் அங்கு திருவிழா கொண்டாடப்படுகின்றது.