October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அவுஸ்திரேலிய கிரிக்கெட் தொடர்: புதிய விதிகளுடன் “பிக்பாஷ் லீக்”

கிரிக்கெட் உலகில் மிகவும் பிரசித்திபெற்ற பிக்பாஷ் லீக் இருபது 20 தொடரில் இம்முறை புதிய விதிமுறைகள் சிலவற்றை அறிமுகப்படுத்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

போட்டிகள் மீது ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டவும், போட்டியை விறுவிறுப்பாக நீடிக்கச் செய்யவும் பிக்பாஷ் லீக் இருபது 20 தொடரில் வழமையாகவே புதுமைகளையும், மாற்றங்களையும் கொண்டு வருவது வழக்கமாகும்.

கடந்த முறை நாணய சுழற்சிக்கு பதிலாக துடுப்பை சுழற்றும் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டமை நினைவு கூரத்தக்கது.

அந்த வகையில் இந்த முறை முக்கியத்துவம் வாய்ந்த மூன்று விதிகள் செயற்படுத்தப்படவுள்ளன.

பவர் சார்ஜ்:

முதல் 6 ஓவர்கள் “பவர் பிளே” 4 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளன. துடுப்பெடுத்தாடும் அணி எஞ்சிய 2 பவர் பிளே ஓவர்களை 11 ஆவது ஓவருக்கு பின்னர் பெற்றுக்கொள்ள முடியும். இது “பவர் சார்ஜ்” என பெயரிடப்பட்டுள்ளது.

முக்கிய வீரர்:

அடுத்ததாக மாற்று வீரராகப் பெயரிடப்பட்டுள்ள 12 அல்லது 13 ஆவது வீரரை 10 ஓவர்கள் முடிந்த பின்பு இரண்டு அணிகளுமே களமிறக்க முடியும்.

அவருக்கு பதிலாக அதுவரை துடுப்பெடுத்தாடாத அல்லது ஓர் ஓவர் பந்து வீசியுள்ள ஒரு வீரரை வெளியேற்ற முடியும்.

3 புள்ளிகள் வழங்கப்படும்:

அணியின் வெற்றிக்கான புள்ளிகள் 3 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோன்று இரண்டு அணிகளில் 10 ஓவர்களில் முடிவில் கூடுதல் ஓட்டங்களைப் பெற்றிருந்த அணிக்கு ஒரு புள்ளி வழங்கப்படவுள்ளது.

இதன் மூலம் தோல்வியடையும் அணிக்கும் புள்ளிகள் கிடைப்பதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.

அதாவது 10 ஓவர்களிலும் முன்னிலைப் பெற்று வெற்றியும் பெற்றால் 4 புள்ளிகளை சுவீகரிக்கலாம்.

ஒரு வேளை தோல்வியடைந்த அணி 10 ஓவர்களில் முன்னிலைப் பெற்று இருந்தால் அவர்களுக்கு ஒரு புள்ளி கிடைக்கும். இது அணிகள் சம எண்ணிக்கையிலான புள்ளிகள் பெறுவதைத் தவிர்த்து அரைஇறுதி சுற்றை தீர்மானிக்க இலகுவாக இருக்கும்.

கொரோனா அச்சுறுத்தலால் பல மாதங்கள் பிற்போடப்பட்ட பிக்பாஷ் லீக் இருபது 20 கிரிக்கெட் தொடர் எதிர்வரும் டிசம்பர் 10 ஆம் திகதி அவுஸ்திரேலியாவில் ஆரம்பமாகவுள்ளது. இதில் 8 அணிகள் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.