(Photo: LewisHamilton/ Twitter)
போர்மியூலா வன் (formula 1) கார் பந்தயத்தில் பிரித்தானியாவின் லூவிஸ் ஹெமில்டன் 7ஆவது தடவையாக உலக சாம்பியனாகியுள்ளார்.
இதன் மூலம் அதிக தடவைகள் போர்மியூலா வன் உலக சாம்பியனான ஜேர்மனியின் மைக்கல் ஷூமேக்கர் வசமுள்ள சாதனையையும் ஹெமில்டன் சமப்படுத்தியுள்ளார்.
துருக்கி கிராண்ட் பிரீயை வென்றதன் மூலம் லூவிஸ் ஹெமில்டன் இவ்வருடம் உலக சாம்பியன் பட்டத்துக்கு பாத்திரமானார்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற துருக்கி கிராண்ட் பிரீயை அவர் ஒரு மணித்தியாலம், 42 நிமிடங்கள், 19 செக்கன்களில் கடந்தார்.
மேலும் 31 செக்கன்கள் தாமதித்து பந்தயத்தைப் பூர்த்தி செய்த மெக்ஸிகோவின் செர்ஜியோ பெரெஸ் இரண்டாமிடத்தையும், ஜேர்மனியின் செபஸ்தியன் வெட்டல் மூன்றாமிடத்தையும் பிடித்தனர்.
35 வயதுடைய லூவிஸ் ஹெமில்டன் 2008, 2014, 2015, 2017, 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் போர்மியூலா வன் உலக சாம்பியனாக மகுடம் சூடினார்.
சமீபத்தில் அதிக கிராண்ட் பிரீக்களை வென்ற மைக்கல் ஷூமேக்கரின் சாதனையையும் லூவிஸ் ஹெமில்டன் முறியடித்தார் என்பதும் நினைவுகூரத்தக்கது.