(Photo: RafaelNadal/ Twitter)
“ஏடிபி பைனல்ஸ்” டென்னிஸ் தொடரை ஸ்பெய்னின் ரபேல் நடால் (34) வெற்றியுடன் ஆரம்பித்துள்ளார்.
சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் முதல் 8 இடங்களை வகிக்கும் வீரர்கள் மாத்திரம் விளையாடும் ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடர் லண்டனில் ஆரம்பமானது.
இதில் ரபேல் நடால் ஒரு போட்டியில் ரஷ்யாவின் ஆன்ட்ரே ருபெல்வை சந்தித்தார்.
போட்டியில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய நடால் இலகுவாக வெற்றி பெற்றார். இரண்டு செட்களையும் அவர் 6-3, 6-4 எனும் கணக்கில் கைப்பற்றினார்.
இதேவேளை, ஒஸ்ரியாவின் டொமினிக் தீம் 7-6, 4-6, 6-3 எனும் புள்ளிகள் கணக்கில் கிரேக்கத்தின் ஸ்டெபனோஸ் டிசிபாஸை வெற்றிகொண்டார்.
ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடர் 1970 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதாகும். அதற்கமைய இந்தத் தொடர் இவ்வருடம் பொன்விழா ஆண்டாக நடைபெறுகிறது.
இதனால் 1970 எனும் பெயரில் ஓர் அணியும், லண்டன் 2020 என்ற பெயரில் மற்றைய அணியுமாக தலா 4 வீரர்கள் வீதம் பிரிந்து போட்டிகள் நடைபெறுகின்றன.
ஒரு அணியிலுள்ள 4 வீரர்களும் தலா ஒரு முறை நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தி அதில் முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் வீரர்கள் அரை இறுதிக்கு தெரிவாகுவார்கள்.
அதன் பின்னர் அரை இறுதியில் வெற்றிபெறும் வீரர்கள் இறுதிப் போட்டியில் மோதுவார்கள் என்பதே விதிமுறையாகும்.
சேர்பியாவின் நொவெக் ஜோகோவிச், ரஷ்யாவின் டெனில் மெட்விடேவ், ஜேர்மனியின் அலக்சாண்டர் ஸ்வரெவ் மற்றும் டியாகோ ஸ்வாட்ஸ்மென் ஆகியோர் 1970 அணியில் இடம்பெற்றுள்ளனர்.
ஸ்பெய்னின் ரபாயெல் நடால், ஒஸ்ரியாவின் டொமினிக் தீம், கிரேக்கத்தின் ஸ்டெபனோஸ் டிசிபாஸ், ரஷ்யாவின் ஆன்ட்ரே ருபெல்வ் ஆகியோர் 2020 லண்டன் அணியில் அங்கம் வகிக்கின்றனர்.
ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடர் வரலாற்றில் சுவிட்ஸர்லாந்தின் ரொஜர் பெடரர் 6 தடவைகளும், நொவெக் ஜோகோவிச் 5 தடவைகளும் சாம்பியனாகியுள்ளனர்.
ரபேல் நடால் இதுவரை ஒரு தடவைகூட சாம்பியனாகவில்லை என்பதுடன் அவர் இரண்டு தடவைகள் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.